ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உல்லாஸ்நகர் மாநகராட்சி ஊழியர் உள்பட 2 பேர் கைது- உதவி கமிஷனர் தலைமறைவு
|ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற உல்லாஸ்நகர் மாநகராட்சி ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய உதவி கமிஷனரை போலீசார் தேடிவருகின்றனர்.
மும்பை,
ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற உல்லாஸ்நகர் மாநகராட்சி ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய உதவி கமிஷனரை போலீசார் தேடிவருகின்றனர்.
ரூ.30 ஆயிரம் லஞ்சம்
உல்லாஸ்நகர் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது பாழடைந்த வீட்டை புதுப்பிக்க கோரி மாநகராட்சி உதவி கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். அங்கு மேற்பார்வையாளராக இருந்த ரத்தன் ஜாதவ் (வயது 50) என்பவர் அனுமதி வழங்குவதற்காக உதவி கமிஷனர் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிவித்தார். அப்போது, நடத்திய பேரத்தில் ரூ.25 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டார்.
பின்னர் சம்பவம் குறித்து நபர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
2 பேர் கைது
இந்த புகாரின்பேரில் போலீசார் யோசனைப்படி மேற்பார்வையாளர் ரத்தன் ஜாதவை அந்த நபர் சந்தித்து பணத்தை கொடுக்க முயன்றார். அப்போது தொழிலாளி வியா தேஜி(46) என்பவரிடம் பணத்தை வழங்கும்படி தெரிவித்தார். இதன்படி அவர் தொழிலாளியிடம் லஞ்ச பணத்தை கொடுத்த போது அங்கு வந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் லஞ்சம் வாங்கிய வழக்கில் தொடர்பில் இருந்த மேற்பார்வையாளர் ரத்தன் ஜாதவையும் பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கில் 2 பேர் பிடிபட்ட சம்பவம் பற்றி அறிந்த மாநகராட்சி உதவி கமிஷனர் தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.