பால்கர் மாவட்டத்தில் கன மழைக்கு 2 பேர் பலி
|பால்கர் மாவட்டத்தில் கன மழைக்கு 2 பேர் உயிரிழந்தனர். 32 வீடுகள் இடிந்து விழுந்தது.
வசாய்,
மராட்டியத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதில் பால்கர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இங்கு கனமழைக்கு 32 வீடுகள் இடிந்து விழுந்து உள்ளது. மேலும் 2 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். கடந்த 7-ந்தேதி முதல் 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் சரசரியாக 9 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இதில் வாடா தாலுகாவில் அதிகபட்சமாக 14 செ.மீ. மழை பெய்து உள்ளது.
தகானு தாலுகா சாரோட்டியை சேர்ந்த ரமேஷ்(வயது51) என்பவர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். மறுநாள் அவரது உடல் மீட்கப்பட்டது. இதேபோல வசாய் கிராமப்பகுதியான மதுபன் பகுதியில் உள்ள கால்வாயில் ஆணின் உடல் மீட்கப்பட்டது. இவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தது தெரியவந்தது. இவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விக்ரம்காட் தாலுகா பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார். இதற்கிடையே பால்கர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து அனைத்து கோட்ட அதிகாரிகள் மற்றும் தாசில்தார்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் டாக்டர் மாணிக்குர்சால் அறிவுறுத்தி உள்ளார்.