மும்பையில் சாலை தடுப்பு சுவரில் மோதிய கார் தீ பிடித்து எரிந்து அண்ணன்- தம்பி பலி; 3 பேர் படுகாயம்
|மும்பையில் கார் சாலை தடுப்பு சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்து அண்ணன், தம்பி உடல் கருகி பலியாகினர். பலத்த தீக்காயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பை,
மும்பையில் கார் சாலை தடுப்பு சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்து அண்ணன், தம்பி உடல் கருகி பலியாகினர். பலத்த தீக்காயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தடுப்பு சுவரில் மோதல்
மும்பை மான்கூர்டை சேர்ந்தவர் அஜய் வாகேலா(வயது20). இவரது தம்பி பிரேம் வாகேலா(வயது18). இவர்கள் தங்களது நண்பர்களான ஹர்ஷ் கதம் (20), ஹித்தேஷ் போயிர் (25) ஆகியோருடன் விருந்து ஒன்றில் கலந்து கொள்ள காரில் புறப்பட்டு சென்றனர். டிரைவர் குணால் அத்தர் (25) காரை ஓட்டிச்சென்றார். விருந்து முடிந்த பிறகு மெரின்லைன் பகுதிக்கு உல்லாச சவாரி சென்றனர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் சயான் ஆஸ்பத்திரி அருகே மாட்டுங்கா பி.ஏ. சாலையில் கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.
2 பேர் பலி
இந்த விபத்து காரணமாக காரில் இருந்த சி.என்.ஜி. கியாஸ் டேங்கர் வெடித்து தீப்பற்றியது. சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ பற்றி எரிய தொடங்கியது. காரில் இருந்தவர்களால் தப்பி வெளியே வரமுடியவில்லை. மேலும் கதவை திறக்க முடியாமல் உள்ளே சிக்கி கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று காரில் சிக்கி இருந்த 5 பேரையும் மீட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அண்ணன்- தம்பியான அஜய் வாகேலா, பிரேம் வாகேலா ஆகியோர் உடல் கருகி பலியானார்கள். படுகாயம் அடைந்த மற்ற 3 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 60 முதல் 70 சதவீதம் வரை தீக்காயமடைந்த அவர்களுக்கு தீவிர சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை
இது குறித்து மாட்டுங்கா போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்து உள்ளனர். தீவிர விசாரணை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். அதிகாலையில் நடந்த கார் தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியான சம்பவம் மான்கூர்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.