ரூ.16¾ கோடி போதைப்பொருள் கடத்தி வந்த வெளிநாட்டு பெண் கைது
|அட்டை பெட்டியில் மறைத்து ரூ.16¾ கோடி போதைப்பொருள் கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
அட்டை பெட்டியில் மறைத்து ரூ.16¾ கோடி போதைப்பொருள் கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் கடத்தல்
உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி வழியாக மும்பைக்கு சம்பவத்தன்று விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் வரும் ஒரு பெண் பயணி அதிகளவில் போதைப்பொருளை கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் மும்பை வந்த உகாண்டா விமான பயணிகளின் உடைமைகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில் உகாண்டாவை சேர்ந்த மொரீன் முசரேசி தபதே என்ற பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ரூ.16¾ கோடி போதைப்பொருள்
அதிகாரிகள் பெண் பயணி வைத்திருந்த அட்டை பெட்டியில் சோதனை நடத்தினர். பெட்டியில் இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து வெளியே வைத்தனர். பெட்டியில் சந்தேகத்துக்குரிய வகையில் எந்த பொருட்களும் இல்லை. ஆனால் எல்லா பொருட்களையும் வெளியே எடுத்த பிறகும் பெட்டி கனமாக இருந்தது.
சந்தேகமடைந்த அதிகாரிகள் அட்டை பெட்டியின் பக்கவாட்டு பகுதிகளை கிழித்து பார்த்தனர். அப்போது அதற்குள் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அட்டையை கிழித்து உள்ளே மறைத்து வைத்து இருந்த 2.4 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.16¾ கோடியாகும். இதையடுத்து அதிகாரிகள் பெண் பயணியை கைது செய்தனர். விசாரணையில் அவர் வேறு நபருக்காக போதைப்பொருளை உகாண்டாவில் இருந்து மும்பைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.