இடைத்தேர்தல் நாளில் அந்தேரி கிழக்கு தொகுதியில் 144 தடை உத்தரவு
|இடைத்தேர்தல் நாளில் அந்தேரி கிழக்கு தொகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
இடைத்தேர்தல் நாளில் அந்தேரி கிழக்கு தொகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
144 தடை
அந்தேரி கிழக்கு தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே உயிரிழந்ததை அடுத்து காலியாக இருந்த அந்த தொகுதியின் சட்டசபை உறுப்பினர் பதவிக்கு வருகிற 3-ந் தேதி இடைதேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே களம் இறக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா போட்டியில் இருந்து விலகிய நிலையில், மற்ற முக்கிய கட்சிகள் எதுவும் தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்த நிலையில் மும்பை போலீஸ் துணை கமிஷனர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அந்தேரி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் 3-ந் தேதி குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 144-ன் பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
100 மீட்டர் தொலைவில்..
இதன்படி, அந்தேரி கிழக்கு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் வேட்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் அல்லது தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களை தவிர மற்றவர்களின் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படும். இதை கண்காணிக்க வாக்குச்சாவடிக்கு உள்ளேயும், வெளியேயும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
மேலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்கவும், தேர்தல் அலுவலர்களின் அறிவுத்தல்களை பின்பற்றவும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அந்தேரி கிழக்கு தொகுதியில் 39 வாக்கு மையங்களில் உள்ள 256 வாக்குச்வாடிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.