விபத்தில் பலியான மாணவியின் பெற்றோருக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு- வாகன தீர்ப்பாயம் உத்தரவு
|விபத்தில் பலியான மாணவியின் பெற்றோருக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
தானே,
விபத்தில் பலியான மாணவியின் பெற்றோருக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
விபத்தில் மாணவி பலி
தானே லோக்மானிய நகர் பகுதியை சேர்ந்த ஷ்ரத்தா. ஐ.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படித்து வந்தார். பகுதி நேர வேலையில் ஈடுபட்டு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பாதித்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந் தேதி மும்பையில் இருந்து புனேவிற்கு பயணிகள் காரில் சென்றார். அப்போது அதிவேகமாக டிரைவர் ஓட்டி சென்றதால் சவ்ரோலி சுங்கச்சாவடி அருகே முன்னால் சென்ற வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஷ்ரத்தா படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஷ்ரத்தா உயிரிழந்தார்.
ரூ.12 லட்சம் இழப்பீடு
இதனால் மகளின் வருமானத்தை நம்பி இருந்த பெற்றோர் இழப்பீடு கேட்டு வாகன உரிமையாளரிடம் முறையிட்டனர். அவர் இழப்பீடு தர மறுத்ததால் மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நிறைவில், ஷ்ரத்தா உயிரிழப்பிற்கு வாகன டிரைவரின் அலட்சியமே காரணம் என நிரூபணமானது. இதனை தொடர்ந்து வாகன உரிமையாளர் மற்றும் காப்பீடு நிறுவனம் சேர்ந்து பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு ஆண்டுக்கு 8 சதவீத வட்டியுடன் ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.