< Back
மும்பை
மும்பையில் 10 நாள் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: 2,300 சிலைகள் நிறுவி வழிபாடு
மும்பை

மும்பையில் 10 நாள் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: 2,300 சிலைகள் நிறுவி வழிபாடு

தினத்தந்தி
|
30 Aug 2022 10:35 PM IST

மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 2,300 சிலைகள் நிறுவி வழிபாடு நடத்தப்படுகிறது.

மும்பை,

மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 2,300 சிலைகள் நிறுவி வழிபாடு நடத்தப்படுகிறது.

10 நாள் விழா

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் முழு முதற் கடவுளான ஆனை முகத்தானின் சதுர்த்தி விழா புதன்கிழமை முதல் 10 நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் எளிமையாக நடந்தது.

எனவே இந்த ஆண்டு 2 ஆண்டுகளுக்கும் சேர்த்து வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற உள்ளது. எனவே இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நகர் முழுவதும் களை கட்டி உள்ளது. பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.

பிரமாண்ட சிலைகள்

விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பை நகர வீதிகள் தோரணங்கள் மற்றும் மின்னொளி விளக்கு அலங்காரங்களில் ஜொலிக்கின்றன. முக்கிய வீதிகளில் நிறுவப்பட்டு உள்ள சர்வஜனிக் மண்டல்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சிலைகள் சிற்ப கலைக்கூடங்களில் இருந்து இன்னிசை வாத்தியங்கள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டன.

2 ஆயிரத்து 284 மண்டல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மண்டல்களில் சிவன், முருகன் உள்ளிட்ட கடவுள்களின் அவதாரங்களை தாங்கி பக்தர்களுக்கு விநாயகர் அருள்பாலிக்கிறார். இதேபோல வித்தியாசமான விநாயகர் சிலைகளும் மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

பக்தர்கள் திரளுவார்கள்

மும்பையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா விநாயகர் சிலை கம்பீர தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது. கிங்சர்க்கிள் ஜி.எஸ்.பி. மண்டல் விநாயகர் சிலை தங்கத்தில் ஜொலிக்கிறது.

விநாயகர் மண்டல்கள் அனைத்திலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. பக்தர்கள் அதிகளவில் மண்டல்களில் திரண்டு விநாயகர் சிலைகளை தரிசனம் செய்வார்கள்.

குறிப்பாக லால்பாக் விநாயகர், ஜி.எஸ்.பி. உள்ளிட்ட விநாயகர் மண்டல்களில் தரிசனம் செய்ய நடிகர், நடிகைகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பல்லாயிரக்ணக்கான பக்தர்கள் படையெடுப்பார்கள். 'கண்பதி பாப்பா மோர்யா, மங்கள மூர்த்தி மோர்யா' பக்தி முழக்கம் விண்ணை பிளக்கும்.

மண்டல்களில் தொடர்ந்து 10 நாட்கள் பக்தர்கள் கூட்டம் திரளும். எனவே இந்த மண்டல்களில் பக்தர்களின் தரிசனத்துக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கட்டுக்கடங்காமல் திரளும் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த அதிகளவில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த மண்டல்களில் காணிக்கைகள் குவியும்.

இதேபோல மும்பை தவிர தானே, நவிமும்பை, புனே, கொங்கன் உள்பட மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

பலத்த பாதுகாப்பு

இதேபோல பெரும்பாலான மக்கள் வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்கிறார்கள். வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் எண்ணிக்கை மட்டும் லட்சத்தை தாண்டும்.

10 நாட்கள் வழிபாட்டை தொடர்ந்து அடுத்த மாதம் 9-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்து நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கப்படும். இதேபோல 1½ நாள், 3 நாள், 5 நாள், 7 நாட்களிலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பை மாநகராட்சி, மாநகர போலீஸ் சார்பில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் பல்வேறு ஆயத்த மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுமார் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். சமீப நாட்களில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக போலீசார் கூடுதல் விழிப்புடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொருட்கள் வாங்க கூட்டம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி மாட்டுங்கா, தாதர், செம்பூர், அந்தேரி, மலாடு, லால்பாக் மார்க்கெட்டுகளில் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக அதிகளவில் மக்கள் குவிந்து இருந்தனர்.

இவர்கள் பூஜைக்கு தேவையான மாலைகள், பத்தி, சூடம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள், விநாயகருக்கு பிடித்தமான மோதகம் உள்ளிட்ட பிரசாத பொருட்களை ஆர்வமாக வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்