வாடிக்கையாளர் விவரத்தை புதுப்பிக்க கூறி இந்தி நடிகர் வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் அபேஸ்
|வாடிக்கையாளர் விவரத்தை புதுப்பிக்குமாறு கூறி இந்தி நடிகர் வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை,
வாடிக்கையாளர் விவரத்தை புதுப்பிக்குமாறு கூறி இந்தி நடிகர் வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ரூ.1½ லட்சம் அபேஸ்
மும்பை பாந்திரா பகுதியில் இந்தி நடிகர் அப்தாப் சிவ்தாசனி வசித்து வருகிறார். இவர் 'மஸ்த்', 'மஸ்தி', 'ஹங்காமா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். சம்பவத்தன்று நடிகரின் செல்போனுக்கு அவர் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கியிடம் இருந்து குறுந்தகவல் வந்ததை பார்த்தார். அதில், வாடிக்கையாளர் விவரங்களை (ேக.ஒய்.சி.) புதுப்பிக்குமாறு கூறப்பட்டு இருந்தது. அதை புதுபிக்கவில்லை எனில் வங்கி கணக்கு முடக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நடிகர் குறுந்தகவலில் இருந்த லிங்கை திறந்தார். அதில் கேட்கப்பட்டு இருந்த விவரங்களை பதிவு செய்தார். அடுத்த சில வினாடிகளில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 999 எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
போலீசில் புகார்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் அப்தாப் சிவ்தாசனி வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் ஆன்லைன் மோசடி கும்பல் நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்தது நடிகருக்கு தெரியவந்தது. சம்பவம் குறித்து அவர் மும்பை பாந்திரா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகரின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.