உடல் ஆரோக்கியத்துக்கு யோகாசனம் முக்கியம்- மந்திரி நாராயணகவுடா சொல்கிறார்
|உடல் ஆரோக்கியத்துக்கு யோகாசனம் முக்கியம் என்று மந்திரி நாராயணகவுடா கூறினார்.
மண்டியா:
8-வது யோகா தினம்
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா ஸ்ரீரங்கநாதசாமி கோவில் வளாகத்தில் நேற்று 8-வது சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் விளையாட்டு துறை மந்திரி நாராயணகவுடா கலந்து கொண்டு, யோகாசனம் செய்தார். இது தவிர மாவட்ட கலெக்டர் அஸ்வதி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். அப்போது பேசிய மந்திரி கே.சி.நாராயணகவுடா கூறியதாவது:-
முக மலர்ச்சி
நாட்டில் ஆன்மிக வாதிகள் மலர்ந்த முகத்துடன் இருப்பதற்கு யோகாசனம்தான் காரணம். யோகாசனம் செய்வதால் 125 ஆண்டுகள் வரை ஆயுள் நீடிக்கும். இத்தகைய மருத்துவ குணம் கொண்ட யோகா தினத்தை ரங்கநாதசாமி கோவில் வளாகத்தில் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
உடல் உறுப்புகள் அனைத்து சுறுசுறுப்பாக இயங்க யோகாசனம் மிகவும் முக்கியம். யோகாசனம் செய்தால் மலர்ந்த முகத்துடன் இருக்க முடியும். மன அழுத்தங்கள் நீங்கும். தேவையில்லாதசித்தனைகளை தவிர்த்து, அமைதியான மன நிலையை அடைய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஞாபக சக்தி அதிகம்
இதை தொடர்ந்து பேசிய மாவட்ட கலெக்டர் அஸ்வதி கூறியதாவது:- யோகாசனத்தால் அதிகளவு ஞாபக சக்தி கிடைக்கும். எனவே பள்ளி, கல்லூரிகளில் தினமும் அரை மணி நேரம் மாணவர்களுக்கு யோகாசனம் பயிற்சி அளிக்கலாம். இதனால் பாடத்தின் மீதான மன அழுத்தம் குறையும். மேலும் படிப்பின் மீதான ஆர்வம் அதிகமாகி ஞாபக சக்தியும் பெருகும். இதை அனைத்து மாணவர்களும் கடைபிடிக்க வேண்டும். பள்ளியில் இல்லையென்றால் வீடுகளில் இந்த யோகாசனத்தை செய்யலாம்.
இவ்வாறு கலெக்டர்
கூறினார்.