< Back
பெங்களூரு
யோகா, உலக அமைதிக்கு வழிவகுக்கும்-பிரதமர் மோடி பேச்சு
பெங்களூரு

யோகா, உலக அமைதிக்கு வழிவகுக்கும்-பிரதமர் மோடி பேச்சு

தினத்தந்தி
|
21 Jun 2022 10:01 PM IST

யோகா உள்ளுணர்வையும், அறிவையும் ஒருமுகப்படுத்தும் என்றும், உலக அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

மைசூரு:

சர்வதேச யோகா தின விழா

மைசூரு அரண்மனை வளாகத்தில் நேற்று சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு யோகா தின விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க மைசூரு அரண்மனையில் சர்வதேச யோகா தின விழாவை கடைபிடிப்பது மகிழ்ச்சியான தருணம். மைசூருவில் யோகா பயிற்சி மேற்கொள்வதுதான் மைசூருவை ஆண்ட மன்னர்களுக்கு சரியான முறையில் அஞ்சலி செலுத்துவதாக இருக்கும். மைசூரு ஆன்மிகம் மற்றும் யோகா நகரமாக விளங்குகிறது. யோகா தின விழாவில் நான் மைசூருவில் இருப்பதை நினைத்து தலைவணங்குகிறேன். மைசூரு, கர்நாடகத்தின் கலாசார தலைநகரம் ஆகும்.

உலக நாடுகள்

பல நூற்றாண்டுகளாக மைசூருவை போன்ற ஆன்மிக நகரங்களில் யோகா கடைபிடிக்கப்படவில்லை. யோகா கலையை யாரும் பாதுகாத்து, பராமரிக்கவில்லை. அதனால் ஆன்மிக நகரமான மைசூருவைப் போன்ற பல நகரங்களில் யோகாவை கடைபிடித்து பல நூற்றாண்டுகளுக்கும் முன்னெடுத்து செல்ல வேண்டும். அதற்கான ஆற்றல் இன்றில் இருந்து உலக சுகாதாரத்துக்கு வழிவகுக்கட்டும். உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் என்பது உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட அடிப்படையாக இருக்கும்.அவ்வாறு உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் அதுதான் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பதாக இருக்கும். யோகா உலக அமைதிக்கு வழிவகுக்கும். மேலும் மனித நேயம், சுகாதார ஆரோக்கிய வாழ்க்கைக்கு நம்பிக்கையை தரும்.

அமைதியை தரும்

யோகா நம் அனைவருக்கும் அமைதியை தரும். இங்குள்ள ஒவ்வொருவருக்கு மட்டுமல்ல, இந்த சமூகம், நாடு, இந்த உலகத்திற்கே யோகா அமைதியை தரும். இதைத்தான் ரிஷிகள், மகரிஷிகள், ஆச்சாரியாஸ் ஆகியோர் எடுத்துரைத்தனர். இது ஒரு தீவிரமான அல்லது கடினமான சிந்தனை என்று யாராவது நினைக்கலாம். ஆனால் நம் முனிவர்கள் யோகா தான் இந்த உலக அமைதிக்கான மந்திரம் என்றும், அது நம் உடல் மற்றும் ஆன்மாவில் இருந்துதான் தொடங்குகிறது என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த உலகம் நம்முள் இருந்துதான் தொடங்குகிறது. யோகா நம்மை அறிவுக்கூர்மையாகவும், விழிப்புணர்வுடனும், உணர்வுப்பூர்வமாகவும் செயல்பட வைக்கிறது. இந்த உலகை விழிப்புணர்வு செய்திட நினைத்தால் முதலில் நாம் நம்மைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கைக்கான வழி

நாம் நம்மைப் பற்றியும், உலகைப் பற்றியும் தெரிந்து கொண்ட பிறகு, நம்மை எங்கு சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், உலகை எங்கு சீர்படுத்த வேண்டும் என்றும் நமக்கு தெரியும். அதன்பிறகே நாம் அதை செய்திட வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை இருக்கும். அது தனிப்பட்ட பிரச்சினையோ அல்லது உலக அளவிலான பிரச்சினையாக இருக்கலாம். சீதோஷ்ண நிலை, காலநிலை மாற்றம் அல்லது இருநாடுகளுக்கு இடையேயான போர், மோதல்கள் போன்றவையாக இருக்கலாம்.

யோகா நம் வாழ்க்கையில் ஒரு அங்கம் அல்ல. அது நம் வாழ்க்கைக்கான வழி. யோகாவை ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்.

மனித நேயம்

இந்த உலகம் கொரோனா எனும் கொடிய நோய் பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பெரும் சவால்களை சந்தித்தது. தற்போது உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். பல்வேறு தடைகளை நம் நாடும், துணைக் கண்டங்களும், கண்டமும் கடந்து இன்று நம் ஒற்றுமையையும், உயிர்ச்சக்தியையும் நிரூபித்து காட்டி இருக்கிறது. யோகா தற்போது சர்வதேச பண்டிகையாக மாறி உள்ளது. யோகா ஒரு தனிமனிதனுக்கானது அல்ல. யோகா இந்த உலக மனித நேயத்துக்கானது. அதனால் இந்த ஆண்டு யோகாவை நாம் மனித நேயத்துக்காக கடைபிடிப்போம்.

யோகா ஒருமைப்படுத்தும்

யோகா பயிற்சி நம்மை உணர்வுள்ள, இரக்க குணம் கொண்ட, திறமைமிக்க மனிதராக மாற்றும். அது நமக்கு எதிர்வரும் சவால்களை சந்திக்க உத்வேகமாக இருக்கும். கோடிக்கணக்கான மக்கள் ஒருமித்த கருத்துடன், சாதாரண உணர்வுகளுடன் இருப்பார்கள். ஆனால் அவர்கள் உள்ளுணர்வு அமைதியையும், உலக அமைதியையும் எதிர்பார்க்கும்.

அவர்கள் அனைவரையும் இந்த யோகா ஒருங்கிணைக்கும். ஒவ்வொருவரது உள்ளுணர்வையும், அறிவையும் யோகா ஒருமுகப்படுத்தும். அதுதான் நமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இருக்கும்.

பன்முகத்தன்மை

75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்த தருணத்தில் நாம் யோகா தின விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. யோகா தினம் இந்தியாவின் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு நாளாக அமைந்துள்ளது. பரந்த சிந்தனை, ஏற்றுக்கொள்ளும் தன்மை நம் ஒவ்வொருவருக்கும் வளர வேண்டும். நினைவுச்சின்னம் போன்று விளங்கும் சிறப்புமிக்க இடங்களில் பெருந்திரளாக திரண்டு யோகா பயிற்சி மேற்கொள்வது இந்தியாவின் கடந்த காலம், பரந்த சிந்தனை, ஒற்றுமை, பன்முகத்தன்மை ஆகியவற்றை பிரதிபலிப்பதாக உள்ளது.

இளைஞர்கள் யோகாவில் புதிய யோசனைகள், சாத்தியக்கூறுகளை சிந்தித்து அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பின்னர் அவர் யோகா மற்றும் மனித நேயத்துக்காக நடவடிக்கை மேற்கொண்ட அனைத்து நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும் செய்திகள்