< Back
பெங்களூரு
கர்நாடகத்தில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்:  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பெங்களூரு

கர்நாடகத்தில் 10 மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்': வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தினத்தந்தி
|
17 July 2022 5:29 PM GMT

கர்நாடகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், 10 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுத்து வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் கடந்த மாதம்(ஜூன்) இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மலைநாடு மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா மற்றும் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

அதேபோல் வடகர்நாடக மாவட்டங்களான பீதர், பாகல்கோட்டை, ஹாவேரி, பெலகாவி, தார்வார், கலபுரகி ஆகிய இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக ஆறு, குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது. கே.ஆர்.எஸ்., கபினி உள்ளிட்ட அணைகளிலும் தண்ணீர் மட்டம் உயர்ந்து திறந்துவிடப்பட்டு வருகிறது.

இதனால் காவிரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்துள்ளன. இதனால் கிராமங்கள், வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்து பயிர்கள் நாசமாகி உள்ளது. மேலும் கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வீடுகள் சேதமடைந்துள்ளது.

14 கிராமங்களை, வெள்ளம் சூழ்ந்தது

இந்த நிலையில் நேற்று முன்தினமும் கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. உத்தர கன்னடா மாவட்டத்தில் ஹொன்னாவர், குமட்டா தாலுகாக்களில் பெய்த மழைக்கு 14 கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த கிராமங்களை சேர்ந்த 330 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு அரசு ஆஸ்பத்திரிக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். பின்னர் மோட்டார்கள் மூலம் தண்ணீர் அனைத்தையும் வெளியேற்றினர்.

தட்சிண கன்னடா

மாவட்டத்தில் பண்ட்வால் தாலுகா பத்திரகோடி, கரிமஞ்சுளா, கொடும்பாடி, கலர்பே உள்பட பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமானது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கேருசொப்பா மற்றும் காளி ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏரி உடையும் அபாயம்

குடகு மாவட்டத்தில் மடிகேரி, தலக்காவிரி, பாகமண்டலா, நாபொக்லு உள்பட பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மடிகேரி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை 275-ல் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மேம்பால சுவர்களை புனரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ேமலும் சில இடங்களில் நெற்பயிர்கள், காபி செடிகள், வாழை, கரும்பு தோட்டங்களில் தண்ணீர் புகுந்ததால் விளை பயிர்கள் அனைத்தும் நாசமானது. சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா தேவதிகொப்பா பகுதியில் ஓடும் தொட்டகெரே ஏரியில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏரியை ஒட்டி அமைந்துள்ள உரகனஹள்ளி, தேவதிகொப்பா, எலவாடி, சகஸ்திரவள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மஞ்சள் அலர்ட்

இந்த நிலையில் கர்நாடகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடலோர, மலைநாடு மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, மங்களூரு, சிக்கமகளூரு, குடகு, ஹாசன், சிவமொக்கா மற்றும் வட கர்நாடக மாவட்டங்களான பீதர், பெலகாவி, கலபுரகி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யகூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த 10 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரபிக்கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான மற்றும் ஆற்றுப்படுகையில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்