விவசாய நிலங்களை நாசப்படுத்திய காட்டுயானைகள்
|நஞ்சன்கூடு தாலுகாவில் விவசாய நிலங்களில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
நஞ்சன்கூடு
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா சந்திரவாடி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டுயானைகள் கிராமத்தில் உள்ள விளை நிலங்களை நாசப்படு்த்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகிறார்கள்.
இ்ந்தநிலையில், சந்திரவாடி கிராமம் அருகே உள்ள மெல்லி தாளப்புரா கிராமத்திற்குள் 5-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் நேற்று காலை நுழைந்தன. அந்த யானைகள் மனோஜ், தினேஷ் ஆகியோரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்தன.
இதையடுத்து அங்கு இருந்த மின் வேலியை காட்டுயானைகள் பிடுங்கி எரிந்தன. அப்போது மின்வேலியில் மின்இணைப்பு கொடுக்கவில்லை. இதனால் காட்டுயானைகள் உயிர் தப்பியது. பின்னர் காட்டுயானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, ராகி பயிர், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை காலால் மிதித்து நாசம் செய்து கொண்டு இருந்தன.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பட்டாசுகளை வெடித்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதையடுத்து காட்டுயானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன.
காட்டுயானைகளால் பல லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என விவசாயிகள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர்.