பெங்களூருவுக்கு 2½ மணி நேரம் தாமதமாக வந்த வந்தேபாரத் ரெயில்
|சென்னையில் புறநகர் ரெயில் தடம்புரண்டதால் வந்தேபாரத் ரெயில் 2½ மணி நேரம் தாமதமாக பெங்களூருவுக்கு வந்தது.
பெங்களூரு:
சென்னையில் புறநகர் ரெயில் தடம்புரண்டதால் வந்தேபாரத் ரெயில் 2½ மணி நேரம் தாமதமாக பெங்களூருவுக்கு வந்தது.
வந்தேபாரத் ரெயில்
இந்தியாவில் அதிவேக ரெயிலான வந்தேபாரத் ரெயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்தேபாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குறைந்த நேரத்தில் செல்வதால் வந்தேபாரத் ரெயிலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து மைசூருவுக்கு வந்தேபாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சென்னை-மைசூரு இடையே 6½ மணி நேரத்தில் கடக்கிறது. இந்த வழித்தடத்தில் மற்ற ரெயில்களை விட வந்தேபாரத் ரெயில் விரைவாக செல்கிறது. இந்த நிலையில், நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தேபாரத் ரெயில் 2½ மணி நேரம் தாமதமாக பெங்களூருவுக்கு வந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
2½ மணி நேரம் தாமதம்
சென்னையில் இருந்து நேற்று காலை 5.50 மணிக்கு வந்தேபாரத் ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் காலை 10.10 மணிக்கு பெங்களூருவுக்கு வர வேண்டும். ஆனால் அந்த ரெயில் சுமார் 2½ மணி நேரம் தாமதமாக மதியம் 12.37 மணிக்கு பெங்களூருவுக்கு வந்தது. மேலும் மதியம் 12.20 மணிக்கு மைசூருவை சென்றடைய வேண்டிய வந்தேபாரத் ரெயில் 2 மணி நேரம் 11 நிமிடம் தாமதமாக மதியம் 2.31 மணிக்கு மைசூருவுக்கு சென்றது. சென்னையில் புறநகர் ரெயில் ஒன்று தடம்புரண்டதால் வந்தேபாரத் ரெயில் தாமதமானதாக சொல்லப்படுகிறது.இதே போல் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட மேலும் சில ரெயில்களும் தாமதமாக சென்றன
ஆனாலும் 2 மணி நேரத்துக்கு மேலாக தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். மைசூரு தசராவை காண வந்த பயணிகளும், மைசூருவில் இருந்து திரும்பி சென்னை செல்ல காத்திருந்த பயணிகளும் கடும் அவதி அடைந்தனர்.