வாலிபர் கொலை வழக்கில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது
|பெங்களூருவில் வாலிபர் கொலை வழக்கில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கோண காதல் விவகாரத்தில் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் வாலிபர் கொலை வழக்கில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கோண காதல் விவகாரத்தில் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.
வாலிபர் கடத்தி கொலை
தாவணகெரே மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ்(வயது 25). இவர், பெங்களூரு பாகலகுன்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தனது மாமா வீட்டில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். கடந்த 5-ந் தேதி வேலைக்கு சென்ற லோகேஷ் மாயமானார். கடந்த 8-ந் தேதி பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி அருகே உள்ள வயலில் லோகேஷ் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து பாகலகுன்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில், லோகேஷ் கொலை தொடர்பாக சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதாப், அவரது நண்பர் மஞ்சுநாத்தை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
2 பேர் கைது
பிரதாப் பெங்களூரு பீனியா அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்கிறார். தனது கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கு, தன்னுடைய நிறுவனத்தின் அருகில் உள்ள மற்றொரு நிறுவனத்தில் பிரதாப் வேலை வாங்கி கொடுத்தார். அந்த இளம்பெண்ணை பிரதாப் காதலித்துள்ளார். இதற்கிடையில், அந்த நிறுவனத்தில் சமீபத்தில் லோகேஷ் வேலைக்கு சேர்ந்தார்.
ஒரே நிறுவனத்தில் லோகேசும், இளம்பெண்ணும் வேலை செய்ததால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதுபற்றி பிரதாப்புக்கு தெரியவந்தது. தான் காதலித்த இளம்பெண், தறபோது லோகேசை காதலிப்பது பிரதாப்புக்கு பிடிக்கவில்லை.
இளம்பெண்ணுடன் காதல்
இதையடுத்து, கடந்த 5-ந் தேதி வேலை முடிந்து நாகசந்திரா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வந்த லோகேசை, பிரதாப், மஞ்சுநாத் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர். மாதநாயக்கனஹள்ளியில் வைத்து காதல் விவகாரம் தொடர்பாக பேசியுள்ளனர். அப்போது லோகேசுக்கும், பிரதாப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரதாப், மஞ்சுநாத்துடன் சேர்ந்து லோகேசை கல்லால் தாக்கி கொன்று விட்டு, வயலில் உடலை வீசியது தெரியவந்தது.
கடந்த 5-ந் தேதி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து லோகேசை பிரதாப் கடத்தி செல்லும் வீடியோ காட்சிகள் அங்குள்ள கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் மூலமாக 2 பேரும் போலீசாரிடம் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.