< Back
பெங்களூரு
தலைக்காவிரியில் தீர்த்த உற்சவம் கோலாகலம்
பெங்களூரு

தலைக்காவிரியில் தீர்த்த உற்சவம் கோலாகலம்

தினத்தந்தி
|
19 Oct 2023 12:15 AM IST

தலைக்காவிரியில் நடந்த தீர்த்த உற்சவத்தில் தீர்த்த ரூபிணியாக காவிரி தாய் எழுந்தருளி காட்சி தந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீரை வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

குடகு;

தலைக்காவிரி தீர்த்த உற்சவம்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா தலைக்காவிரியில் புண்ணிய நதியான காவிரி உற்பத்தியாகிறது. இந்த காவிரி நதி கர்நாடகம், தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ளது. காவிரி நதி பிறப்பிடமான தலைக்காவிரியில் பிரம்மகுந்திகே பகுதியில் காவிரி தாய் காவிரி தீர்த்தரூபிணியாக காட்சி அளிக்கிறார்.

ஆண்டுதோறும் கடக லக்கனத்தில் துலாம் பெயர்ச்சி நடக்கும்போது காவிரி தாய், தீர்த்த ரூபிணியாக எழுந்தருளுவதே காவிரி தீர்த்த உற்சவமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தீர்த்த உற்சவம் அக்டோபர் 18-ந்தேதி (அதாவது நேற்று) அதிகாலை 1.27 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பக்தர்கள் குவியத் தொடங்கினர்

இதையொட்டி நேற்று முன்தினம் முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரம்மகுந்திகேயில் குவியத் தொடங்கினர். சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் பாகமண்டலாவில் இருந்து நடைபயணமாக 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிரம்மகுந்திகேவுக்கு வந்தனர்.

இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 11 மணி முதலே தலைக்காவிரி பிரதான அர்ச்சகர் குருராஜ் ஆச்சார் தலைமையில் சகஸ்ர நாம அர்ச்சனை, புஷ்பார்ச்சனை, குங்கும அர்ச்சனை மற்றும் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

ஒரு நிமிடம் முன்னதாக....

அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு நிமிடம் முன்னதாக பிரம்ம குந்திகேயில் அதிகாலை 1.26 மணிக்கு காவிரி தாய் தீர்த்த ரூபிணியாக காட்சி அளித்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் காவிரி தாய் வாழ்க... என கோஷம் எழுப்பினர். விடிய, விடிய பக்தர்கள் காவிரி தாய்க்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் மாநில சிறிய நீர்ப்பாசனத்துறை மந்திரியும், குடகு மாவட்ட பொறுப்பு மந்திரியுமான என்.எஸ்.போசராஜு, மடிகேரி எம்.எல்.ஏ. மந்தர் கவுடா, விராஜ்பேட்டை எம்.எல்.ஏ.க்கள் ஏ.எஸ்.பொன்னண்ணா, பிரதாப் சிம்ஹா எம்.பி., கலெக்டர் வெங்கடராஜா, மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி வர்னித் நேகி ஆகியோர் பிரம்மகுந்திகேயில் காவிரி தாய் தீர்த்த ரூபிணியாக எழுந்தருளிய இடத்தில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

புனித நீர்

காவிரி தாய் தீர்த்த ரூபிணியாக எழுந்தருளியதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரம்ம குந்திகேயில் இருந்து புனித நீர் எடுத்து அர்ச்சகர்கள் பக்தர்கள் மீது தெளித்தனர்.

அதன் பிறகு ஏராளமான பக்தர்கள் குடங்கள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் கேன், பாட்டில்களில் பிரம்ம குந்திகேயில் இருந்து புனித நீரை எடுத்து காவிரி தாய் சிலை மீது ஊற்றினர். பின்னர் பாத்திரங்களில் அந்த புனித நீரை பிடித்து தங்களது வீடுகளுக்கு பக்தர்கள் கொண்டு சென்றனர்.

மாநிலம் செழிக்க பிரார்த்தனை

பின்னர் மந்திரி என்.எஸ்.போசராஜு கூறுகையில், காவிரி தாய் குடகு மட்டுமல்லாமல் கர்நாடகம், தமிழ்நாடு முழுவதும் மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு நீர் வழங்கி வருகிறாள். வருண பகவானின் கருணையால் நல்ல மழை பெய்து காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடி விவசாயம் செழிக்க காவிரி தாயை பிரார்த்தித்தேன் என்றார்.

பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா கூறுகையில், காவிரி தாய் தீர்த்த ரூபிணியாக அருட்காட்சி தந்தார். காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மாநிலம் செழிக்க காவிரி தாயை வேண்டினேன் என்றார்.

விழாவையொட்டி பாகமண்டலா, தலைக்காவிரியில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் மைசூரு, பெங்களூரு உள்பட பல பகுதிகளில் பாகமண்டலாவுக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்