< Back
பெங்களூரு
உலக பிரசித்திபெற்ற மைசூரு தசரா  விழா நாளை  தொடங்குகிறது
பெங்களூரு

உலக பிரசித்திபெற்ற மைசூரு தசரா விழா நாளை தொடங்குகிறது

தினத்தந்தி
|
14 Oct 2023 12:15 AM IST

உலக பிரசித்திபெற்ற மைசூரு தசரா விழா நாளை கோலாகலமாக தொடங்குகிறது.

மைசூரு

மைசூரு தசரா விழா

அரண்மனை நகரம், சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தசரா விழா உலக புகழ் பெற்றதாகும்.

10 நாட்கள் நடக்கும் தசரா விழாவில் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தை காண லட்சக்கணக்கானோர் குவிவார்கள்.

அதில், சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க யானைகள் புடைசூழ 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை ஒரு யானை சுமந்து செல்லும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இந்தநிலையில், தசரா விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. முன்னதாக சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

மலர்தூவி

பின்னர் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளிகிறார். அம்மனுக்கு மலர் தூவப்படுகிறது. தசரா விழாவை காலை 10.32 மணியளவில் கன்னட இசையமைப்பாளர் ஹம்சலேகா, சாமுண்டீஸ்வரி அம்மன் மலர்களை தூவி தொடங்கி வைக்கிறார்.

அவருடன் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பிரகலாத்ஜோஷி, ராஜீவ் சந்திரசேகர், ஷோபா, ஏ.நாராயணசுவாமி, பகவந்த்த கூபா ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி மலர்தூவி தசரா விழாவை தொடங்கி வைக்கிறார்கள்.

இந்த விழாவில், மந்திரிகள் எச்.சி. மகாதேவப்பா, கே.வெங்கடேஷ், , சிவராஜ் தங்கடகி, எச்.கே.பட்டீல், ராமலிங்க ரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், ஈஸ்வர் கண்ட்ரே, பைரதி சுரேஷ், மைசூரு மாநகராட்சி மேயர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ. ஜி.டி.தேவேகவுடா தசரா தொடக்க விழாவிற்கு தலைமை தாங்குகிறார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகள்

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாமுண்டீஸ்வரி கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. முதல்-மந்திரி சித்தராமையா தசரா தொடக்க விழாவில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்த உள்ளார். மாநிலத்தில் நல்ல மழை பெய்து விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்து எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

மக்கள் அனைவரும் நன்மையுடன் வாழவேண்டும். நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா வேண்டுவார் என கூறப்படுகிறது.

இதுபோல் மைசூரு அரண்மனையிலும் தசரா விழா கலாசாரம் மற்றும் பாரம்பரிய முறைப்படி தொடங்குகிறது. இதற்காக அரண்மனை வளாகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. பின்னர் அரண்மனை பாரம்பரியம் மற்றும் கலாசார முறைப்படி தசரா விழா சிறப்பு பூஜைகளும், நவராத்திரி விழாவும் தொடங்கப்படுகிறது.

பின்னர் ராஜ உடையில் மன்னர் யதுவீர் தங்க, வைர, நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்துகிறார். தசரா விழா முடியும் வரை அவர் தனியார் தர்பார் நடத்துவார். மேலும் அன்று மாலை 6 மணி அளவில் அரண்மனை வளாகத்தில் கலாசார நிகழ்ச்சிகள் தொடங்கப்படுகிறது.

முதல்-மந்திரி சித்தராமையா இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். மாலை 6.30 மணிக்கு தசரா மின்விளக்கு அலங்காரம் தொடங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு கர்நாடக சங்கீத வித்வான் விருது வழங்கப்படுகிறது.

திரைப்பட விழா

முன்னதாக காலை 11 மணி அளவில் தசரா திரைப்பட விழா தொடங்குகிறது, மதியம் 1 மணிக்கு உணவு மேளா, மதியம் 2 மணிக்கு மல்யுத்த போட்டி, மதியம் 3 மணிக்கு தசரா மலர் கண்காட்சி, மாலை 4 மணிக்கு தசரா கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடங்கப்படுகிறது.

நிகழ்ச்சி நடக்கும் எல்லா இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தசரா தொடக்க விழாவை காண ஏராளமானோர் குவிவார்கள் என்பதால் சாமுண்டி மலைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்