நடுரோட்டில் ரவுடி வெட்டிக் கொலை
|ராமநகர் அருகே நடுரோட்டில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
ராமநகர்:-
ரவுடி வெட்டிக் கொலை
ராமநகர் மாவட்டம் புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கரமேகலு தொட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் லோகேஷ் (வயது 48). இவர், ரவுடி ஆவார். லோகேஷ் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு லோகேஷ் தனது நண்பருடன் மதுஅருந்த சென்றிருந்தார். மதுஅருந்தி விட்டு குடிபோதையில் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், லோகேசை வழிமறித்தனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் லோகேசை சரமாரியாக வெட்டினார்கள். இதில், பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே அங்கிருந்து மர்மநபர்கள் ஓடிவிட்டனர். லோகேசின் நண்பருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
தகவல் அறிந்ததும் ராமநகர் புறநகர் போலீசார் விரைந்து வந்து லோகேசின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் ராமநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரித்தார்கள். அப்போது லோகேஷ் ரவுடி என்பதால் முன்விரோதம் அல்லது பணப்பிரச்சினை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து ராமநகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த கொலை சம்பவம் ராமநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.