< Back
பெங்களூரு
கருத்து கணிப்புகள் காரணமாக ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு எந்த ஆதங்கமும் இல்லை; குமாரசாமி பேட்டி
பெங்களூரு

கருத்து கணிப்புகள் காரணமாக ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு எந்த ஆதங்கமும் இல்லை; குமாரசாமி பேட்டி

தினத்தந்தி
|
30 Jun 2022 9:29 PM IST

தேசிய கட்சிகள் நடத்திய கருத்து கணிப்புகள் காரணமாக ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு எந்த ஆதங்கமும் இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் உள்ள ஜே.பி.பவனில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ஆதங்கம் இல்லை

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் தொடர்பாக தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா கருத்து கணிப்புகள் நடத்தின. அந்த கருத்து கணிப்புகள் பற்றிய தகவல்கள் எனக்கும் கிடைத்தது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதுவே எங்கள் கட்சியின் நோக்கமாகும். அதற்கான நடவடிக்கைகளில் தற்போது நான் உள்ளிட்ட கட்சியின் அனைத்து தரப்பினரும் ஈடுபட்டுள்ளோம்.

அதனால் தேசிய கட்சிகள் நடத்திய கருத்து கணிப்புகளால் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு எந்த விதமான ஆதங்கமும் இல்லை. சட்டசபை தேர்தலில் 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது இலக்கு. அந்த 123 தொகுதிகள் எவை என கண்டறிந்து, அங்கு வெற்றி பெறுவதற்கான முயற்சிகள் தற்போது இருந்தே நடக்கிறது. வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதியில் இருந்து பஞ்சரத யாத்திரை தொடங்க உள்ளது.

ஆட்சி அமைக்கும்

இந்த யாத்திரையின் போது கிராமங்களில் தங்கி இருந்து, அங்கு ஜனதாதளம் (எஸ்) கட்சியை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக கிராமங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கு பதிலாக, மக்களுடன் கூட்டணி அமைத்து ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆட்சி அமைக்கும். இதற்காக 15 வாகனங்களில் 28 தொகுதிகளுக்கு இந்த ரதயாத்திரை செல்ல உள்ளது.

பெங்களூரு நகரின் வளர்ச்சி என்ற பெயரில் தரமற்ற பணிகளை மாநில பா.ஜனதா அரசு மேற்கொண்டு வருகிறது. அதாவது வளர்ச்சி பணிகள் பெயரில் பெங்களூருவில் ஊழல் மட்டுமே நடக்கிறது. இதுபற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

மேலும் செய்திகள்