சிவமொக்கா தசரா விழாவில் பங்கேற்க வந்த யானை குட்டி ஈன்றது
|சிவமொக்கா தசரா விழாவிற்கு பங்கேற்க வந்த யானை குட்டி ஈன்றது. இதனால் யானைகள் சக்ரேபைலு முகாமிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
சிவமொக்கா-
சிவமொக்கா தசரா விழாவிற்கு பங்கேற்க வந்த யானை குட்டி ஈன்றது. இதனால் யானைகள் சக்ரேபைலு முகாமிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
தசரா விழா
மைசூருவில் ஆண்டுதோறும் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தசரா விழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். இந்த தசரா விழாவை போல் கர்நாடகத்தில் சில இடங்களில் தசரா விழா கொண்டாடப்படுகிறது. மைசூரு தசரா விழா ஜம்பு சவாரி ஊர்வலத்துடன் நேற்று நிறைவடைந்தது. இதனை காண லட்சக்கணக்கானோர் குவிந்தனர். இந்தநிலையில், சிவமொக்காவில் ஆண்டுதோறும் மாநகராட்சி சார்பில் தசரா விழா நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான நிதியும் மாநில அரசு ஒதுக்கியது.
இந்த தசரா விழாவில் ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று நடந்தது. இந்த ஜம்பு சவாரி ஊர்வலத்தில் வெள்ளியால் ஆன சாமுண்டி அம்மன் சிலையை யானைகள் கம்பீரமாக சுமந்து செல்லும். இதற்காக 3 யானைகள் சக்கரேபைலு யானைகள் முகாமில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த யானைகளுக்கு தசரா மண்டலி சார்பில் நடைபயிற்சி, பாரம் சுமக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன.
ஜம்பு சவாரி ஊர்வலம்
இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டது பின்னர் சிவமொக்கா கோட்டை பகுதியில் உள்ள வாசவி திடலில் யானைகள் தங்க வைக்கப்பட்டன. இந்தநிலையில், இரவு 10 மணியவில் நேத்ராவதி என்ற யானை குட்டி ஈன்றது. இதுகுறித்து பாகன்கள் வனத்துறை அதிகாரி பிரசன்ன கிருஷ்ணா பட்கருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அவர் கால்நடை டாக்டர் வினயுடன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். பின்னர் குட்டி யானை, நேத்ராவதி மற்றும் ஹேமாவதி ஆகிய 3 யானைககளை லாரியில் வனத்துறையினர் ஏற்றி சக்ரேபைலு யானைகள் பயிற்சி முகாமுக்கு கொண்டு ெசன்றனர்.
யானைகள் பயிற்சி முகாம்
இதுகுறித்து கால்நடை டாக்டர் வினய் கூறுகையில், வழக்கமாக சிவமொக்கா தசரா விழாவில் பங்கேற்கும் யானைகளுக்கு கர்ப்ப பரிசோதனை செய்யப்படும். இதுபோல் இந்த ஆண்டும் கர்ப்ப பரிசோதனையும் செய்யப்பட்டது. ஆனால் நேத்ராவதி யானை கர்ப்பமாக இருந்தது பரிசோதனையில் தெரியவில்லை. குட்டி யானை 80 கிலோ எடை உள்ளது. குட்டி ஈன்ற யானையுடன் பெண் யானை இருப்பது அவசியம் என்பதால் ஹேமாவதி யானையும் சக்ரேபைலு பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யானை குட்டி ஈன்றதால் யானைகள் ஜம்பு சவாரி ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. இதனால் லாரியில் வைத்து வெள்ளியால் ஆன சாமுண்டி அம்மன் சிலை கொண்டு செல்லப்பட்டது. கடந்த ஆண்டு இதேப்போல் மைசூரு தசரா விழாவில் ஒரு யானை குட்டி ஈன்றது குறிப்பிடத்தக்கது.