< Back
பெங்களூரு
பேபி பெட்டாவில் கல்குவாரி மூடல்:    தமிழக தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை- குடும்பத்தினர் போராட்டம்
பெங்களூரு

பேபி பெட்டாவில் கல்குவாரி மூடல்: தமிழக தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை- குடும்பத்தினர் போராட்டம்

தினத்தந்தி
|
28 July 2022 5:55 PM GMT

பேபி பெட்டாவில், மூடப்பட்ட கல்குவாரி திறக்கப்படாததால் அங்கு வேலை பார்த்த தமிழக தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவரது குடும்பத்தினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மண்டியா:

கல்குவாரி மூடல்

மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா பேபி பெட்டாவில் 100-க்கும் அதிகமான கல்குவாரிகள் செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக கல்குவாரிகள் செயல்படகூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்குவாரி மீண்டும் திறக்கும் வாய்ப்பு வந்தது. இதற்காக சோதனை முறையில் வெடிவைத்து பார்க்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. ஆனால் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் வெடி வைத்து சோதிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கல்குவாரியை மீண்டும் திறக்க முடியாத நிலை உருவானது. மேலும் அங்கு வேலை செய்து வந்த கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதை கண்டித்து தொழிலாளிகள் தரப்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது.

ஆனால் கே.எஸ்.ஆர். அணைக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுவதால், கல்குவாரியை மீண்டும் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி வருகிறது. இதனால் கல்குவாரி

தொழிலாளிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

தொழிலாளி தற்கொலை

-இந்த நிலையில் பாண்டவபுராவில் வசித்து வருபவர் மஞ்சுநாத்(வயது 33). தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இவர், பேபி பெட்டாவில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார். தற்போது அவர் வேலை பார்த்த கல்குவாரி மூடப்பட்டு உள்ளதால் மஞ்சுநாத்துக்கு வேலை இல்லை. இதனால் அவருக்கு வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடன் தொல்லைக்கு ஆளாகியுள்ளார்.

இந்த நிலையில் அவர், ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த பாண்டவபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்துகொண்ட மஞ்சுநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அவரது குடும்பத்தினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்