< Back
பெங்களூரு
வடகர்நாடக மாவட்டங்களில் திடீர் நிலநடுக்கம்-மக்கள் பீதி
பெங்களூரு

வடகர்நாடக மாவட்டங்களில் திடீர் நிலநடுக்கம்-மக்கள் பீதி

தினத்தந்தி
|
9 July 2022 11:01 PM IST

வடகர்நாடகத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.

பெங்களூரு:

ஊரை காலி செய்த மக்கள்

வடகர்நாடகத்தில் உள்ள கலபுரகி, விஜயாப்புரா மாவட்டங்கள் மராட்டிய மாநில எல்லையில் அமைந்து உள்ளன. அந்த 2 மாவட்டங்களும், மராட்டியத்தில் உள்ள லாத்தூர் மாவட்டமும் மிக அருகில் உள்ளன. இதனால் லாத்தூரில் நிலநடுக்கம் ஏற்பட்டால் கலபுரகி, விஜயாப்புரா மாவட்டங்களிலும் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிக்கடி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கலபுரகி மாவட்டம் காடிகேஸ்வரா கிராமத்தை சேர்ந்த மக்கள் ஊரை காலி செய்துவிட்டு வெளியேறிய சம்பவமும் நடந்தது.

ஆனால் அதன்பின்னர் வடகர்நாடகத்தில் நிலநடுக்கம் ஏற்படவில்லை. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தட்சிண கன்னடா-குடகு மாவட்ட எல்லையில் உள்ள கிராமங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து தற்போது அங்கு பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் வடகர்நாடகத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

நிலநடுக்கம்

விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள நாகதானா, தி.கோட்டா, விஜயாப்புரா ஆகிய தாலுகாக்களில் உள்ள கிராமங்களில் நேற்று காலை 6.22 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கிராமங்களில் உள்ள வீடுகள் குலுங்கின. சுவர்களிலும் விரிசல் உண்டானது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதுபோல பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா துபச்சி என்ற கிராமத்திலும், பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா சிரோடி என்ற கிராமத்திலும் நிலநடுக்கம் உண்டானது.

விஜயாப்புரா மாவட்டத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது தெரியவந்து உள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். நிலநடுக்கம் குறித்து கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மைய இயக்குனர் மனோஜ் ராஜன் கூறும்போது, 'விஜயாப்புரா, பெலகாவி, பாகல்கோட்டையில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிதமானது தான். நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 30 முதல் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு தாக்கம் இருக்கும். இந்த நிலநடுக்கம் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது' என்றார்.

மேலும் செய்திகள்