தொழில் அதிபர் கொலை வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேர் கைது
|மாலூர் அருகே நடந்த தொழில் அதிபர் கொலை வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோலார் தங்கவயல்
தொழில் அதிபர் கொலை வழக்கு
கோலார் மாவட்டம் மாலூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் தொழில் அதிபர் முனியப்பா ரெட்டி. இவர் பொக்லைன் எந்திரம் உள்பட பலவற்றை வாடகைக்கு விட்டு வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ராம்தேவ். இவர் மாலூர் டவுனில் சப் இன்ஸ்ெபக்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் வினோத். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராம்தேவ், முனியப்பாவிடம் ரூ.40 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. 3 மாதங்களில் இந்த பணத்தை திரும்பி கொடுப்பதாக ராம்தேவ் கூறினார். ஆனால் கொடுக்கவில்லை.
இதனால் முனியப்பா, ராம்தேவிடம் பணத்தை திரும்ப கேட்டார். ஆனால் ராம்தேவ் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராம்தேவின் வீட்டிற்கு சென்ற முனியப்பா, அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இந்த தகவலை ராம்தேவ் தனது மகன் வினோத்திடம் கூறினார். இதில் கோபம் அடைந்த வினோத், முனியப்பாவை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்கிடையில் முனியப்பா மாலூர் போலீசில் புகார் அளிக்க முயற்சித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது
இதற்காக அவர் மாலூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். இதனை அறிந்த வினோத் தனது நண்பர் சுபாசுடன், முனியப்பாவை வழிமறித்தார்.அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரம் முனியப்பா காரில் இருந்த கத்தியை எடுத்து வினோத் மற்றும் அவரது நண்பரை மிரட்டினார்.
ஆனால் வினோத் அதே கத்தியை பறித்து, முனியப்பாவின் வயிற்றில் குத்தினார். மேலும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து மாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத் மற்றும் சுபாசை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் 2 பேரும் ஆந்திர மாநிலம் பாகேபள்ளியில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை மாலூர் அழைத்து வந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.