ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்
|பெங்களூருவில் 43.49 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையிலான மெட்ரோ ரெயில் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டது. 80 நிமிடத்தில் 60 ரூபாயில் பயணிக்க முடியும்.
பெங்களூரு:-
சல்லகட்டா-ஒயிட்பீல்டு
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்கும் விதமாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பையப்பனஹள்ளி-கெங்கேரி இடையே ஊதா நிற பாதையிலும், நாகசந்திரா முதல் பட்டு நிறுவனம் வரையிலும் பசுமை பாதையிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒயிட்பீல்டு-கே.ஆர்.புரம் இடையே ஊதா நிற பாதையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஊதா நிற பாதையில் பையப்பனஹள்ளி-கே.ஆர்.புரம் இடையேவும், கெங்கேரி-சல்லகட்டா இடையேவும் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது.
ஆனால் கே.ஆர்.புரம் மற்றும் பையப்பனஹள்ளி, கெங்கேரியில் இருந்து சல்லகட்டா வரையிலான மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகளும் நிறைவு பெறாமல் இருந்தது.
ரெயில் சேவை தொடக்கம்
இந்த நிலையில், கெங்கேரி-சல்லகட்டா மற்றும், பையப்பனஹள்ளி-கே.ஆர்.புரம் இடையிலான மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்று, அங்கு சோதனை ஓட்டமும் நடைபெற்றிருந்தது. அந்த சோதனை ஓட்டமும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சல்லகட்டாவில் இருந்து ஒயிட்பீல்டு வரை ஒரே வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்களை இயக்க பெங்களூரு மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது.
இதையடுத்து, சல்லகட்டாவில் இருந்து ஒயிட்பீல்டு வரையிலான நீண்ட தூர மெட்ரோ ரெயில் சேவை (ஊதா நிற பாதை) நேற்று அதிகாலை 5 மணியளவில் தொடங்கி உள்ளது. சல்லகட்டா-கெங்கேரி வரை 2.05 கிலோ மீட்டர் தூரம் வரையிலான மெட்ரோ ரெயில் சேவையும், பையப்பனஹள்ளியில் இருந்து கே.ஆர்.புரம் வரை 2.10 கிலோ மீட்டர் தூரம் வரையிலான மெட்ரோ ரெயில் சேவை எந்த ஒரு தொடக்க விழாவும் நடைபெறாமல் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
80 நிமிடத்தில் பயணம்
வழக்கமாக புதிய ரெயில் சேவையை முதல்-மந்திரி தொடங்கி வைப்பது வழக்கம். ஆனால் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று டெல்லி சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சல்லகட்டா -ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டு இருப்பதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வழித்தடத்தில் 10 நிமிடத்திற்கு ஒரு ரெயில் இயக்கப்படும். நெருக்கடியான நேரங்களில் 3 நிமிடத்திற்கு ஒரு ரெயிலும் இயக்கப்பட உள்ளது.
சல்லகட்டாவில் இருந்து ஒயிட்பீல்டுவுக்கு ஒட்டு மொத்தமாக 43.49 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இந்த தூரத்தை மெட்ரோ ரெயிலில் 80 நிமிடத்தில் சென்றடைய முடியும். அதாவது சல்லகட்டா ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு மணிநேரம் 20 நிமிடத்தில் ஒயிட்பீல்டு மெட்ரோ ரெயில் நிலையத்தை சென்றடைய முடியும் என்றும் மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூ.60 கட்டணம்
இந்த வழித்தடத்தில் 43.49 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்தனை கிலோ மீட்டர் தூரத்தை ஆட்டோ அல்லது வாடகை கார்களில் பயணிக்க வேண்டும் என்றால், ரூ.500 முதல் ரு.600-க்கும் மேல் கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரத்தில் ஆட்டோ, வாடகை கார்கள், அரசு பஸ்களில் பயணிக்க அதிக நேரமும் ஆகும்.
இதன் காரணமாக சல்லகட்டா-ஒயிட்பீல்டு இடையிலான மெட்ரோ ரெயில் சேவைக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் மெட்ரோ ரெயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எத்தனை ரெயில் நிலையம்?
பெங்களூரு சல்லகட்டா-ஒயில்பீல்டு இடையே ஒட்டு மொத்தமாக 43.49 கிலோ மீட்டர் தூரம் கொண்ட வழித்தடத்தில் ஒட்டுமொத்தமாக 37 ரெயில் நிலையங்கள் உள்ளன. அவற்றில்
மெஜஸ்டிக், எம்.ஜி.ரோடு, பையப்பனஹள்ளி, கே.ஆர்.புரம், கெங்கேரி, மைசூரு ரோடு உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் முக்கியமானதாகும். இந்த வழித்தடத்தில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்றிருந்தது. சில அரசியல் காரணங்களுக்காக ரெயில் சேவை தொடங்கப்படாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கடைசி மெட்ரோ ரெயில் எப்போது?
பெங்களூரு சல்லகட்டா-ஒயிட்பீல்டு இடையிலான மெட்ரோ ரெயில் சேவை தினமும் அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. அதுபோல், இரவு 10.45 மணிக்கு ஒயிட்பீல்டு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரெயிலே கடைசி ஆகும். அந்த வழித்தடத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் இரவு 11.05 மணிக்கு கடைசி ரெயில் புறப்பட்டு செல்லும் என்று மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரெயில் திட்டத்திற்கான செலவு எவ்வளவு?
பெங்களூரு கெங்கேரி-பையப்பனஹள்ளி இடையேயும், கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையேயும் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் கெங்கேரியில் இருந்து சல்லகட்டாவுக்கும், பையப்பனஹள்ளியில் இருந்தும் கே.ஆர்.புரத்திற்கும் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதில், கெங்கேரியில் இருந்து சல்லகட்டாவுக்கு ரூ.167.97 கோடியும், பையப்பனஹள்ளியில் இருந்து கே.ஆர்.புரம் வரை ரூ.363.48 கோடியும் செலவாகி இருந்தது. கே.ஆர்.புரத்தில் இருந்து பையப்பனஹள்ளி வரையிலான தடத்தில் பென்னிகானஹள்ளியில் பெங்களூரு-சேலம் இடையிலான ரெயில் தண்டவாளம் உள்ளது. அதற்கு மேலே வெப்கார்னர் மூலமாக மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டதால், செலவு அதிகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
73.81 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில் சேவை
பெங்களூரு நகரில் பையப்பனஹள்ளி-கெங்கேரி (ஊதா நிற பாதை), நாகசந்திரா-பட்டு நிறுவனம் (பசுமை நிற பாதை) இடையே மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது ஊதா நிற பாதையில் கே.ஆர்.புரம்-பையப்பனஹள்ளி, கெங்கேரி-சல்லகட்டா இடையே பணிகள் முடிவடைந்து மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகரில் 73.81 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பசுமை மற்றும் ஊதா நிற பாதைகளில் மொத்தம் 66 மெட்ரோ ரெயில் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.