கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது-3 நாட்கள் மழை நீடிக்கும்
|கர்நாடகத்தில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த மழை 3 நாட்கள் நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
கோடை மழை
கர்நாடகத்தில் கோடை வெயில் சுட்டெரித்த போதும், கடந்த மாதம் பரவலாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கோடை மழை பெய்தது. தொடர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்நிலவியது. இந்த நிலையில் மழைப்பொழிவு படிப்படியாக குறைந்து வந்தது.
இதற்கிடையே இந்தியாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கர்நாடகத்தில் நேற்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பெங்களூரு, சிவமொக்கா உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இந்த நிலையில் மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என்று பெங்களூருவில் உள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
3 நாட்கள் மழை நீடிக்கும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. சிக்கமகளூரு, கார்வார், பெங்களூருவில் இந்த பருவமழை தொடங்கியுள்ளது. அடுத்த 2, 3 நாட்களில் மாநிலம் முழுவதும் தொடங்கும். தமிழ்நாடு, வடகிழக்கு மாநிலங்களிலும் இந்த பருவமழை தொடங்கும்.கர்நாடகத்தில் நாளை (இன்று) முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இடி-மின்னலுடன்...
வட கர்நாடகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று(புதன்கிழமை) வட கர்நாடகத்தின் உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், மைசூரு, கோலார், மண்டியா, சிவமொக்கா, சித்ரதுர்கா உள்ளிட்ட மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்யும். சாம்ராஜ்நகர், ஹாசன், குடகு, மண்டியா, ராமநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். பெங்களூருவை பொறுத்தவரையில் பகலில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில நேரங்களில் இடியுடன் மழை பெய்யும்.இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அடுத்த 3 மாதங்களுக்கு மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.