< Back
பெங்களூரு
சிவமொக்கா; மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மீது தாக்குதல்
பெங்களூரு

சிவமொக்கா; மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
23 Oct 2023 12:15 AM IST

தொடர்ந்து ‘ஹாரன்’ அடித்ததால் ஆத்திரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மீது தாக்குதல் நடந்தது. இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிவமொக்கா-

தொடர்ந்து 'ஹாரன்' அடித்ததால் ஆத்திரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மீது தாக்குதல் நடந்தது. இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தனியார் பஸ் டிரைவர்

சிவமொக்கா டவுன் வெங்கடாபுரா பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது35). இவர் அப்பகுதியில் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். மஞ்சுநாத் அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு தனது சித்தப்பா மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு சாப்பிட்டு விட்டு 2 பேரும் திரும்பி வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது இவருக்கு முன்னால் பாலா ராஜா அரசு சாலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று சென்று கொண்டு இருந்தது.

அப்போது, மஞ்சுநாத் தனது மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து ஹாரன் அடித்தார். இதனால் முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் கோபம் அடைந்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளை சாலையில் நிறுத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரும் மஞ்சுநாத் மற்றும் அவரது சித்தப்பா மகனிடம் ஏன் தொடர்ந்து ஹாரன் அடிக்கிறீர்கள் என கேட்டனர். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

2 பேர் படுகாயம்

அப்போது மஞ்சுநாத், அவரது சித்தப்பா மகனை, அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியமாக தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதில் மஞ்சுநாத் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, மஞ்சுநாத் வினோபாநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பியோடிய மர்மநபர்களை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்