< Back
பெங்களூரு
ராணுவ தளவாட உற்பத்தி துறையில் ரூ.60 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும்
பெங்களூரு

ராணுவ தளவாட உற்பத்தி துறையில் ரூ.60 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும்

தினத்தந்தி
|
19 Jun 2022 8:37 PM IST

ராணுவ தளவாட உற்பத்தி துறையில் ரூ.60 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி கூறியுள்ளார்.

பெங்களூரு:

தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதலீடுகள் ஈர்க்கப்படும்

கர்நாடகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி விமானவியல் மற்றும் பாதுகாப்பு கொள்கை உருவாக்கப்படும். ராணுவ தளவாட உற்பத்தி துறையில் அதிகளவில் முதலீடுகள் ஈர்க்கப்படும். நமது ராணுவம் 70 சதவீத தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

5 ஆண்டுகளில் விமானவியல் மற்றும் பாதுகாப்பு துறை பிரிவில் அதாவது ராணுவ தளவாட உற்பத்தி துறையில் ரூ.60 ஆயிரம் கோடி முதலீடுகள் கிடைக்கும். இதன் மூலம் 70 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். கர்நாடகத்தை உற்பத்தி மையமாக மாற்றுவோம். ராணுவத்திற்கு தேவையான மின்சாதனங்கள் உள்பட தளவாடங்கள் கிடைப்பதில் கர்நாடகத்தின் பங்கு 40 சதவீதமாக உள்ளது.

ராணுவ தளவாடங்கள்

இந்தியாவின் சந்தை மதிப்பு தற்போது ரூ.77 ஆயிரம் கோடியாக உள்ளது. இதை வருகிற 2031-ம் ஆண்டுக்குள் ரூ.1½ லட்சம் கோடியாக உயர்த்த இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமானவியல்-பாதுகாப்பு கொள்கையின் கீழ் கர்நாடகத்தில் பெங்களூரு, பெலகாவி, மைசூரு, துமகூரு மற்றும் சாம்ராஜ்நகரில் ராணுவ தளவாட உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும். மேலும் அனைத்து வசதிகளுடன் கூடிய ராணுவ தளவாட உற்பத்தி பூங்காக்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அருகே ஹரலூர் கிராமத்தில் 1,200 ஏக்கர் பரப்பளவில் ராணுவ தளவாட பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இத்தகைய பூங்காக்களில் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு நிதி சலுகையும் அளிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு வந்த அன்னிய நேரடி முதலீடுகளில் 40 சதவீதம் கர்நாடகத்திற்கு கிடைத்துள்ளது. அதனால் ராணுவ தளவாட உற்பத்தியின் மையமாக கர்நாடகம் மாறும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

இவ்வாறு முருகேஷ் நிரானி கூறினார்.

மேலும் செய்திகள்