பொதுமக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ.
|கோலார் தங்கவயல் மினி விதான சவுதாவில் குடிநீர், இருக்கை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தியும் அதை ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
கோலார் தங்கவயல்:
கோலார் தங்கவயல் மினி விதான சவுதாவில் குடிநீர், இருக்கை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தியும் அதை ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இருக்கைகள்
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. மினி விதானசவுதா என்று அழைக்கப்படும் இந்த தாலுகா அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான மக்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கிறார்கள். ஆனால் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் அமர இருக்கைகள் இல்லை. மேலும் குடிநீர் வசதியும் இல்லை.
இதுபற்றி தாசில்தார் நாகவேணியிடமும், தொகுதி எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதரிடமும் பொதுமக்கள் தனித்தனியாக புகார் மனுக்களை கொடுத்தனர். ஆனால் இதுவரையில் அவர்கள் இதுபற்றி கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
திணறி வருகிறார்கள்
கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை அருகே கோர்ட்டு வளாகமும், மினி விதான சவுதாவும் ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்டது. ஆனால் கோர்ட்டு வளாகத்திலும், மினி விதான சவுதா வளாகத்திலும் பொதுமக்களுக்கான எந்தவொரு வசதியும் இல்லை. மேலும் அங்கு பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை கூறும் உதவி மையங்களும் இல்லை. மேலும் யாரும் பொதுமக்களுக்கு உதவி செய்யவும் முன்வருவதில்லை. இதனால் கோர்ட்டு மற்றும் மினி விதான சவுதாவுக்கு வரும் பொதுமக்கள் எந்த அலுவலகத்துக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
பொதுமக்கள் கோரிக்கை
குடிநீர் மற்றும் அமர இருக்கை வசதிகள் இல்லாததால் கோர்ட்டு, மினி விதான சவுதாவின் வெளிப்புறத்தில் பொதுமக்கள் அமர வேண்டிய நிலையும், ரூ.10 முதல் ரூ.30 வரை செலவு செய்து கடைகளில் தண்ணீர் பாட்டில் வாங்கி குடிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு இருக்கிறது.
பங்காருபேட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் அமர இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கோலார் தங்கவயலிலும் இதுபோன்ற வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.