< Back
பெங்களூரு
ராபர்ட்சன்பேட்டை  பஸ் நிலையத்தில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்
பெங்களூரு

ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலையத்தில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

தினத்தந்தி
|
10 Oct 2023 12:15 AM IST

ராபர்ட்சன்பேட்டை பஸ்நிலையத்தில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். இந்த குப்பை கழிவுகளை அகற்றும்படி அவர்கள் நகரசபை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராபர்ட்சன்பேட்டை

பங்காருபேட்டை பஸ் நிலையம்

கோலார் தங்கவயலை அடுத்த ராபர்ட்சன்பேட்டை நகரசபைக்குட்பட்ட பகுதியில் பஸ் நிலையம் ஒன்று உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன.

இதனால் பங்காருபேட்டை பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டமாக காணப்படும். இதனால் இங்கு பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த இருக்கைகளில் விஷமிகள் சிலர் பான்பராக், எச்சில் துப்புவது, மதுபானங்கள் குடித்துவிட்டு பாட்டில்களை வீசி விட்டு செல்வதுபோன்ற காரணங்களால் பயணிகள் அமர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் குப்பை கழிவுகளும் குவிந்து கிடக்கிறது.இந்த குப்பைகளை சுத்தம் செய்யும்படி நகரசபை நிர்வாகத்திடம் பயணிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நகரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும்

இதனால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும் பஸ்நிலையத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகளும் நகரசபையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,

பங்காருபேட்டை பஸ் நிலையத்தில் பயணிகள் வரத்து அதிகரித்து காணப்படும். இதனால் நாங்கள் நகரசபை கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து கடை நடத்தி வருகிறோம். எங்கள் கடைகளின் முன்பு நாங்கள் சுத்தமாக வைத்து கொண்டாலும், பஸ் நிலையத்தின் பிற பகுதிகள் சுத்தமாக இருப்பது இல்லை.பயணிகள் பஸ் நிலையத்தில் அமர வைத்துள்ள இருக்கைகள் தூய்மை இன்றி இருப்பதுடன், கடைகளை சுற்றியும் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது.

இதனால் பஸ்நிலையத்தில் துர்நாற்றம் வீசி வருகிறது. பஸ்சில் பயணிகள் இருக்க கூட முடியவில்லை. அந்த அளவிற்கு பஸ்சிற்குள் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது.இந்த பஸ்நிலையத்தை தூய்மையாக வைத்து கொள்ளும்படி நகரசபை நிர்வாகிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்துவிட்டோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நகரசபையை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்