வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
|ஒசக்கோட்டையில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் அதிகாரிகள் அகற்றினர்.
ஒசக்கோட்டை:
பெங்களூருவில் அரசு நிலங்கள், வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றை மீட்கும் முயற்சிகளை பெங்களூரு மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ராஜகால்வாய்கள் ஆக்கிரமிப்பு நிலங்களை கடந்த மாதங்களில் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்கள் கொண்டு இடித்து மீட்டனர். இந்த நிலையில் பெங்களூரு புறநகர் ஒசகோட்டை டவுன் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்தது. இதையடுத்து அவற்றை மீட்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் நேற்று ஈடுபட்டனர்.
அதன்படி நேற்று அதிகாலையில் ஒசகோட்டை டவுன் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த குருசாமி மற்றும் அவரது மகன் மோகன் ரவி ஆகியோர் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் வீடுகள் மற்றும் வணிக வளாகத்தை கட்டி இருந்தது தெரிந்தது. ஏற்கனவே அந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வனத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று காலையில் அங்கு வந்த வனத்துறையினர் வணிக வளாகத்தில் இருந்த பொருட்களை அகற்றினர். பின்னர் பொக்லைன் கொண்டு கட்டிடம் மற்றும் கூடாரங்களை இடித்து அகற்றினர். மொத்தம் வணிக வளாகத்தில் இருந்த 38 கடைகளை வனத்துறையினர் இடித்து அகற்றினர். இதற்கிடையே தங்களுக்கு சொந்தமான பொருட்களை காலி செய்வதற்கு ஒரு வாரம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என குருசாமியின் மனைவி வனத்துறையிடம் கோரினார்.
இதையடுத்து வனத்துறையினர் அவரது வீட்டை இடிக்காமல் சென்றனர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியையொட்டி முன்னெச்சரிக்கையாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மோகன் ரவி முன்னாள் மந்திரி எம்.டி.பி.நாகராஜின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.