உப்பள்ளி அருகே தாறுமாறாக ஓடி தர்கா மீது கார் மோதல்; 3 பேர் பலி
|உப்பள்ளி அருகே தாறுமாறாக ஓடிய கார், தர்கா மீது மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
பெங்களூரு:
தாறுமாறாக ஓடிய கார்
தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே புனே சாலையில் நேற்று அதிகாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் அமைந்திருந்த தர்கா மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. தர்காவின் சுவரும் இடிந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் காரில் பயணித்து வந்தவர்களை மீட்க முயன்றனர். அப்போது இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாக இருப்பதும், ஒரு பெண் படுகாயம் அடைந்திருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி அறிந்த குந்துகோல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் பலியானது உப்பள்ளியைச் சேர்ந்த ஹனுமந்தப்பா பீமனகட்டி, அவரது மனைவி ரேணுகா, மருமகன் ரவீந்திரா ஆகியோர் என்பதும், படுகாயம் அடைந்தது அவர்களது உறவுக்கார பெண் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் பெங்களூருவுக்கு சென்று அங்கு உறவினர் ஒருவரின் வீட்டு கிரகப்பிரவேச விழாவில் கலந்து கொண்டுவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இச்சம்பவம் குறித்து வழ்க்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.