ராமநகர்: கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் மர்மசாவு
|ராமநகரில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் மர்மமான முறையில் இறந்தார். இதனால் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநகர் -
ராமநகர் மாவட்டம் கனகபுரா டவுன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் கமலாபாய் (வயது 38). இவர் தனது கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் கமலாபாய் தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கணவரை பிரிந்து வாழ்ந்த கமலாபாய்க்கு, லிங்கராஜ் (47) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருந்தது. 2 பேரும் சில ஆண்டுகள் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். பின்னர் கமலாபாயுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக லிங்கராஜ் பிரிந்து சென்றிருந்தார்.
இதனால் கமலாபாயை, லிங்கராஜ் தான் கொலை செய்திருப்பதாக கமலாபாயின் மகன் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதன்காரணமாக கமலாபாய் தற்கொலை செய்தாரா?, கொலை செய்யப்பட்டாரா? என்பது மர்மமாக உள்ளது.
இதுதொடர்பாக கனகபுரா டவுன் போலீசில் லிங்கராஜ் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து லிங்கராஜை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.