கர்நாடகத்தில் மின் தட்டுப்பாட்டை போக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல்; மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி
|கர்நாடகத்தில் மின் தட்டுப்பாட்டை போக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்று மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
பெங்களூரு:
கர்நாடக மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் தற்போது மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் கோடைகாலத்தை விட கூடுதலாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் 15 ஆயிரம் மெகாவாட்டுக்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கேற்ப மின்சாரத்தை வினியோகம் செய்வது எங்களின் கடமை. அதற்காக வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் மற்றும் நிலக்கரியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
விதிமுறைகளின்படி மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் எந்த தவறும் நடைபெறவில்லை. இந்த விஷயத்தில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ள குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. நாங்கள் செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தவில்லை.
இத்தகைய சவாலான நேரத்திலும் விவசாயிகளுக்கு தினமும் 5 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குகிறோம். இதில் கரும்பு, நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 7 மணி நேரம் மின்சாரம் வழங்குகிறோம். மின்சார வினியோக பணிகளை மேற்பார்வையிட உயர் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் வீட்டு உபயோகம் மற்றும் விவசாய பம்புசெட்டுகளின் மின் பயன்பாடு 45 சதவீதம் அதிகரித்துள்ளது.
அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்துவிட்டது. சூரியசக்தி, காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. தினமும் 20.80 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கர்நாடகத்தில் 20.40 கோடி யூனிட் மின்சாரம் தான் உற்பத்தி ஆகிறது. ஆயினும் நாங்கள் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் அனைத்து தரப்பினருக்கும் மின்சாரம் தடையின்றி வழங்குகிறோம்.
அதனால் அனல் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் மின் உற்பத்தி குறைந்துள்ளது. அந்த அனல் மின் நிலையங்களில் விரைவில் மின் உற்பத்தி வழக்கமான நிலையை எட்டும். மத்திய தொகுப்பில் இருந்து நமக்கு மின்சாரம் கிடைக்கும்.
உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் இருந்தும் மின்சாரத்தை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளோம்.
இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.