பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வில் தோல்வி: மாணவிகள் உள்பட 3 பேர் தற்கொலை
|பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவிகள் உள்பட 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
பெங்களூரு:
மாணவர் தற்கொலை
உத்தரகன்னடா மாவட்டம் குமட்டா தாலுகா கடலே கிராமத்தை சேர்ந்தவர் பிரணாம் ஈஸ்வர் நாயக் (வயது 18). இவர் பி.யூ.சி. கல்லூரியில் அறிவியல் பாட பிரிவு எடுத்து படித்து வந்தார். மேலும் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வை எழுதிய அவர் முடிவுக்காக காத்திருந்தார்.
இந்த நிலையில் தேர்வு முடிவு வெளியானது. இதில் 4 பாடங்களில் அவர் தேர்ச்சி அடையவில்லை. இதனால் மனம் உடைந்த பிரணாம் ஈஸ்வர் நாயக் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து குமட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் 3 பேர்...
இதுபோல் கதக் தாலுகா ஹர்தி கிராமத்தை சேர்ந்த பவித்ரா லிங்கதலா லிங்கடலா (18), மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா மகாதேவபுரா கிராமத்தை சேர்ந்த எம்.ஜே.ஸ்பந்தனா (17), குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகா பசவனஹள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுபாசின் மகளான சத்யா (18) ஆகியோரும் பி.யூ.சி. தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் சத்யா தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்டார். மற்ற 3 பேரும் தேர்வில் தோல்வி அடைந்த சோகத்தில் தற்கொலை முடிவை தேடிக்கொண்டனர்.