< Back
பெங்களூரு
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் போராட்டம்
பெங்களூரு

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் போராட்டம்

தினத்தந்தி
|
12 Oct 2023 9:05 PM GMT

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் காலி குடங்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்டியா:-

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டது. இருப்பினும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்பேரில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் வருகிற 16-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்கு காவிரியில் திறக்க வேண்டும் என்று கூறியது.

போராட்டம்

இதற்கு விவசாயிகள் சங்கத்தினர், கன்னட அமைப்பினர், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்துக்கு தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியா டவுனில் உள்ள சர் எம்.விசுவேஸ்வரய்யா சிலை அருகே விவசாயிகள் கடந்த 38 நாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று அவர்களது போராட்டம் 40-வது நாளாக தொடர்ந்து நடந்தது.

இதுபோல் மண்டியா மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று காலையில் காலி குடங்களுடன் பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சர் எம்.விசுவேஸ்வரய்யா சிலை அருகே நடைபெறும் விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கோஷம்

போராட்டத்தின்போது அவர்கள் எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கோஷமிட்டனர். காவிரியில் தண்ணீர் திறக்க சாத்தியமில்லை என்று நாடாளுமன்றத்தில் கர்நாடக எம்.பி.க்கள் எடுத்துக்கூற வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்