முல்பாகல் பெஸ்காம் அலுவலகம் முன்பு போராட்டம் மாநில விவசாய சங்க துணைத் தலைவர் தகவல்
|தொடர் மின்தடையை கண்டித்து இன்று (வியாழக்கிழமை) முல்பாகல் பெஸ்காம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று மாநில விவசாய சங்க துணைத் தலைவர் கோவிந்தகவுடா கூறியுள்ளார்.
முல்பாகல்
மின்தடையால் விவசாயம் பாதிப்பு
கோலார் மாவட்டத்தில் ஏற்படும் தொடர் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பெஸ்காம் நிர்வாக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் மின்வினியோகம் சீராக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சவேண்டும் என்றால், நள்ளிரவு தான் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் முல்பாகல் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் இன்று (வியாழக்கிழமை) பெஸ்காம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து நேற்று கோலார் மாவட்டம் முல்பாகலை சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினரின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
பெஸ்காம் அலுவலகம் முற்றுகை
அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத் துணை தலைவர் கோவிந்தகவுடா பேசியதாவது:-
தென்மேற்கு பருவமழை பொய்த்துபோனதால் ஏற்கனவே கோலார் வறட்சி பாதித்த மாவட்டமாக உள்ளது. இதனால் விளை நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், விளை நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது.
எங்களின் குறைகள் குறித்து பெஸ்காம் நிர்வாகத்திற்கு பல முறை கோரிக்கை வைத்துவிட்டோம். ஆனால் பெஸ்காம் நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேபோல வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் மின்சாரம் தடைப்படுகிறது. இதனால் முல்பாகல் பகுதியை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள், தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் எங்களின் கோரிக்கைகளை பெஸ்காம் நிர்வாகத்திற்கு நேரடியாக தெரியப்படுத்தும் நோக்கில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இன்று போராட்டம்
அதன்படி இன்று (வியாழக்கிழமை) முல்பாகல் தாலுகாவில் உள்ள பெஸ்காம் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்த இருக்கிறோம். இந்த போராட்டத்திற்கு தாலுகாவை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர்.
அப்போது எங்கள் கோரிக்கை மனுவை தாசில்தாரிடம் வழங்க இருக்கிறோம். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.