< Back
பெங்களூரு
தனியார் நிறுவன ஊழியரை கொன்று புதரில் உடல் வீச்சு
பெங்களூரு

தனியார் நிறுவன ஊழியரை கொன்று புதரில் உடல் வீச்சு

தினத்தந்தி
|
15 Oct 2023 12:15 AM IST

தனியார் நிறுவன ஊழியரை கொன்று உடலை புதரில் வீசிய சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

ஜாலஹள்ளி:

பெங்களூரு ஜாலஹள்ளி அருகே வசித்து வந்தவர் லோகேஷ். இவர், டிப்ளமோ படித்து விட்டு பீனியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். லோகேசின் சொந்த ஊர் தாவணகெரே ஆகும். கடந்த 5-ந் தேதி வேலைக்கு சென்ற அவர் நள்ளிரவு வரை வீட்டுக்கு திரும்பி வரவில்லை. லோகேசை, அவரது குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, பகலகுன்டே போலீஸ் நிலையத்தில் லோகேசை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில், பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே சிக்க சிக்கனஹள்ளியில் உள்ள புதரில் ஒரு வாலிபரின் உடல் பலத்த காயங்களுடன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது.

போலீஸ் விசாரணையில், அந்த வாலிபர் காணாமல் போனதாக தேடப்பட்ட லோகேஷ் என்பதும், அவரை மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது. கடந்த 5-ந் தேதியே வேலைக்கு சென்றுவிட்டு வந்த லோகேசை 2 பேர் மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்லும் காட்சிகளும் பீனியாவில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அவர்கள் யார்? என்ன காரணத்திற்காக லோகேசை கடத்தி கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை. இதையடுத்து, பகலகுன்டே போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட 2 மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்