மைசூருவில் நடுரோட்டில் போலீசாரை சுற்றி வளைத்து தாக்குதல்
|மைசூருவில் சீக்கிரமாக சாலையை கடக்க கூறியதால் நடுரோட்டில் போலீசாரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய 5 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மைசூரு:-
உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கொண்டாட்டத்தால் மைசூரு திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. இதனால் தசரா விழாவை காண தினமும் பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மைசூருவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதுபோல் நேற்று முன்தினம் பெங்களூருவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 ேபர் மைசூருவுக்கு வந்துள்ளனர். அவர்கள் தசரா நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு மைசூரு ஹார்டிங் சர்க்கிள் பகுதியில் சாலையை கடக்க முயன்றனர்.
அந்த சமயத்தில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்களான ஒய்.ராஜு, அருண் கவுசிக் ஆகியோர், பெங்களூருவை சேர்ந்தவர்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு சாலையை விரைந்து சென்று கடக்கும்படி கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. அப்போது 2 போலீசாரையும், 5 பேர் சேர்ந்து கைகளால் சுற்றி வளைத்து தாக்கினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 2 போலீசாரும், மைசூரு தேவராஜா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில் போலீசாரை தாக்கியது, பெங்களூருவை சேர்ந்த உமேஷ், ஹரீஷ், துருவா, லதா, கனவி உள்பட 5 பேர் என்பதும், தசரா விழாவை பார்க்க வந்த போது இந்த சம்பவம் நடந்ததும் தெரியவந்தது.