மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை; போலீஸ் கமிஷனர் தயானந்த் எச்சரிக்கை
|பெங்களூருவில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வோர் மீது பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் தயானந்த் எச்சரித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வோர் மீது பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் தயானந்த் எச்சரித்துள்ளார்.
மக்கள் குறைதீர்வு கூட்டம்
பெங்களூரு பானசவாடி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், போலீஸ் கமிஷனர் தயானந்த், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து கொண்டனர்.
அப்போது ஒரு நபர், பெங்களூருவில் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களில் சாகசம் செய்வது அதிகரித்து விட்டதாகவும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதுபற்றி கேட்டதால் தங்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் மிரட்டல் விடுப்பதாகவும் கூறினார். இந்த விவகாரம் குறித்து போலீஸ் கமிஷனர் தயானந்த் பதிலளித்து பேசியதாவது:-
பொதுமக்கள் புகார் அளிக்கலாம்
பெங்களூருவில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் நபர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் தான் இந்த சாகத்தில் ஈடுபடுகிறார்கள். இதையடுத்து, சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை கொடுப்போர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
நகரில் எங்காவது மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் சாகசத்தில் ஈடுபட்டால், பொதுமக்கள் தயங்காமல் போலீசாரிடம் புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் அளிக்கும் பட்சத்தில் சாகத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது உறுதி. போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 112 என்ற தொலைபேசி எண்ணுக்கும், 94808-01000 என்ற வாட்ஸ்-அப் எண் மூலமாகவும், சமூகவலைத்தளங்கள் மூலமாகவும் மக்கள் புகார் அளிக்கலாம். பானசவாடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை சரி செய்ய போலீஸ் தரப்பில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.