< Back
பெங்களூரு
விலைவாசி உயர்வு பற்றி பிரதமர் மோடி பேசுவது இல்லை; சித்தராமையா பேட்டி
பெங்களூரு

விலைவாசி உயர்வு பற்றி பிரதமர் மோடி பேசுவது இல்லை; சித்தராமையா பேட்டி

தினத்தந்தி
|
18 July 2022 3:34 PM GMT

விலைவாசி உயர்வு பற்றி பிரதமர் மோடி பேசுவது இல்லை என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மக்களுக்கு துரோகம்

மத்திய பா.ஜனதா அரசு கடந்த 8 ஆண்டுகளில் கர்நாடகத்தில் இருந்து மட்டும் ரூ.19 லட்சம் கோடியும், கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் ரூ.3 லட்சம் கோடியும் வரி வசூலித்துள்ளது. இந்த வரியில் கர்நாடகத்திற்கு ரூ.8 லட்சம் கோடி வந்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு வெறும் ரூ.1.29 லட்சம் கோடி மட்டுமே வழங்கியுள்ளது. நல்ல நாட்கள் வரும் என்று கூறியவர்கள் மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துவிட்டது. நல்ல நாட்கள் வரும் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களின் ரத்தத்தை குடிக்கிறார்கள். தயிர், மோர் மற்றும் உணவு தானியங்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை விதித்துள்ளனர். அரிசி, கோதுமைக்கும் வரி விதித்து இருக்கிறார்கள். ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சிகிச்சை பெறும் அறைகள் வாடகை மீதும் வரி விதித்துள்ளனர்.

மக்கள் பெரிதும் பாதிப்பு

தங்கும் விடுதி கட்டணம் மீதும் வரி போடப்பட்டுள்ளது. சூரியசக்தி மூலம் நீர் வெப்பமாகும் உபகரணங்கள் மீதான வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறு பல்வேறு பொருட்கள் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வரியை உயர்த்தினால் மக்கள் எப்படி அன்றாட வாழ்க்கையை நடத்துவது?. பெரிய நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏழைகள் மீதான வரியை உயர்த்தியுள்ளனர். பிரதமர் மோடி தனது 8 ஆண்டுகால ஆட்சி மற்றும் பசவராஜ் பொம்மை ஓராண்டு கால ஆட்சியை கொண்டாடுகிறார்கள். ஆனால் விலைவாசி உயர்வு பற்றி மோடியோ அல்லது பசவராஜ் பொம்மையோ பேசுவது இல்லை.

மதசார்பற்ற கட்சி

ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்த பிறகு 60 சதவீத சிறுதொழில்கள் அழிந்துவிட்டன. வரி உயர்வு குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்தாலும், அங்கு பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் பிரதிநிதிகளின் பேச்சே எடுபடுகிறது. ஜனதா தளம் (எஸ்) மதசார்பற்ற கட்சி என்று சொல்கிறார்கள். ஆனால் அக்கட்சி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்துள்ளது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்