பெண்ணை கற்பழித்து கொன்ற பெயிண்டர் கைது
|ஒன்னாளி அருகே பெண்ணை கற்பழித்து கொன்ற பெயிண்டர் கைது செய்யப்பட்டார். அவரை, போலீஸ் மோப்ப நாய் காட்டிகொடுத்தது.
சிக்கமகளூரு:
பெண் கற்பழித்து கொலை
தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி டவுன் பகுதியில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருந்தார். இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி விவசாயி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் அவரது மனைவி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து விவசாயி வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் விவசாயியின் மனைவி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மேலும் அவரது துணிகள் கிழிந்த நிலையில் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், ஒன்னாளி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர், மர்மநபர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனால் மர்மநபர்கள் யார் என்று தெரியவில்லை. இதுகுறித்து ஒன்னாளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர்.
போலீஸ் மோப்ப நாய் காட்டிகொடுத்தது
இந்த நிலையில் போலீசார், துங்கா என்ற போலீஸ் மோப்ப நாயை கொலை நடந்த வீட்டிற்கு வரவழைத்து சோதனை நடத்தினர். அப்போது போலீஸ் மோப்ப நாய் கொலை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து ஓட தொடங்கியது. மோப்ப நாயை பின்தொடர்ந்து போலீசார் சென்றனர். அப்போது மோப்ப நாய், அதேப்பகுதியை சேர்ந்த பெயிண்டரான பிரகாஷ்(வயது 25) என்பவரின் வீட்டிற்குள் புகுந்து குளியலறை நோக்கி குரைத்தது.
இதனால் சந்தேகத்தின் பேரில் போலீசார், குளியலறையில் குளித்து முடித்து வெளியே வந்த பிரகாசிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
கைது
அப்போது அவர், பெண்ணை கற்பழித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். மேற்கொண்டு அவரிடம் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று பிரகாஷ்(வயது 33) விவசாயி வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த சந்தர்ப்பத்தில் விவசாயி வெளியே சென்றுள்ளார். இதனை பயன்படுத்திகொண்ட பிரகாஷ், வீட்டிற்குள் புகுந்து பெண்ணை வலுகட்டாயமாக பிடித்து இழுத்து வாயை பொத்தி கற்பழித்துள்ளார். பின்னர் அவரை, பிரகாஷ் அடித்து கொன்றுவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்தனர். மேலும் கைதான அவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.