பக்ரீத் பண்டிகையையொட்டி மைசூருவில், முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
|பக்ரீத் பண்டிகையையொட்டி மைசூருவில், முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
மைசூரு:
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகளில் ஒன்று பக்ரீத். அதன்படி பக்ரீத் பண்டிகையை நேற்று உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கொண்டாடினார்கள். இதேபோல் மைசூருவில் உள்ள முஸ்லிம்களும் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களுக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்தினர். அதிகாலையிலேயே குளித்து புத்தாடை அணிந்த முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்தினர், பின்னர் ஒருவரையொருவர் கட்டி தழுவி பக்ரீத் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து ஆடுகளை குர்பானி கொடுத்து அசைவ உணவு சமைத்து சாப்பிட்டனர். மேலும் அக்கம்பக்கத்தினருக்கும் இறைச்சி, உணவுகளை கொடுத்து அன்பை பகிர்ந்துகொண்டனர். மைசூரு பன்னி மண்டபம் பகுதி திலக் நகரில் உள்ள ஈத்கா மைதானத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அரசியல் பிரமுகர்களான என்.ஆர்.மொகல்லா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தன்வீட் சேட் மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களான நாகேந்திரா, ராமதாஸ் உள்ளிட்டோரும் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பக்ரீத் பண்டிகையையொட்டி மைசூருவில் முஸ்லிம்கள் அதிகம் வசதிக்கும் பகுதிகள் மற்றும் பள்ளிவாசல்கள் உள்ள இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.