நான் அணிந்திருந்தது புலி நகத்துடன் கூடிய தங்க சங்கிலி இல்லை; நிகில் குமாரசாமி விளக்கம்
|நான் அணிந்திருந்தது புலி நகத்துடன் கூடிய தங்க சங்கிலி இல்லை என்று நிகில் குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் புலி நகத்துடன் கூடிய தங்க சங்கிலி அணிந்திருந்ததாக பிக்பாஸ் போட்டியாளர் வர்த்தூர் சந்தோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோல், புலி நகத்துடன் கூடிய தங்க சங்கிலி அணிந்துள்ள நடிகர்கள் தர்ஷன், ஜக்கேஷ், நிகில் குமாரசாமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நிகில் குமாரசாமி தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
என்னுடைய திருமணத்தின் போது புலி நகத்துடன் கூடிய தங்க சங்கிலி அணிந்திருந்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மை இல்லை. வனத்துறை சட்டம் பற்றியும், அந்த வழக்குகளின் தீவிரம் பற்றியும் எனக்கு தெரியும். நான் அறிந்திருக்கிறேன். நான் அணிந்திருந்தது புலி நகம் போன்ற தங்க சங்கிலி தான். அது நிஜமான புலி நகம் இல்லை. அது தற்போதும் என்னிடம் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்னிடம் உள்ள புலி நகம் போன்ற தோற்றத்துடன் இருக்கும் தங்க சங்கிலியை வாங்கி பரிசோதனை நடத்தலாம். அதனால் என் மீது உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு நிகில் குமாரசாமி கூறியுள்ளார்.