கோலாரில் ரூ.5 கோடி செலவில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம்
|கோலாரில் ரூ.5 கோடி செலவில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டப்படும் என்று ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
கோலார் தங்கவயல்
கோலார் தங்கவயலில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் திறக்க வேண்டும் என்று தொகுதி எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. அதற்கான நிலங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கோலார் தங்கவயல் தொகுதிக்குட்பட்ட பி.இ.எம்.எல்.நகர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. விரைவில் இந்த புதிய கட்டிடப்பணிகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து நேற்று தொகுதி எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோலார் தங்கவயல் கோரமண்டல் டொல்கேட் அருகே வட்டார போக்குவரத்து (ஆர்.டி.ஓ.) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆங்கிலேயர் காலத்தில் தங்கச்சுரங்கத்திற்கு சொந்தமான இடங்களில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் உரிய வசதிகள் இல்லை.
இதையடுத்து நவீன வசதிகளுடன் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான பி.இ.எம்.எல்.நகர் பகுதியில் விளையாட்டு மைதானம் அருகே 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்படும்.
இந்தநிலையில் வட்டார போக்குவரத்து கட்டிடம் மாலுருக்கு மாற்றப்படும் என்று வதந்திகள் பரவி வருகிறது. இதனை யாரும் நம்பவேண்டார். கோலார் தங்கவயலில்தான் அவை கட்டப்படும். இதற்காக மாநில அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2 தளங்கள் கொண்ட இந்த கட்டிடம் நவீன முறையில் கட்டப்படுகிறது.
அனைத்து பணிகளும் டிஜிட்டல் முறையில் நடைபெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு நவீனத்துவத்தை புகுத்த இருக்கிறோம். இதனால் பொதுமக்களின் தேவைகளை உடனே நிறைவேற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.