< Back
பெங்களூரு
மைசூருவில், யோகா கின்னஸ் சாதனை முயற்சியை கர்நாடக அரசு கைவிட்டது
பெங்களூரு

மைசூருவில், யோகா கின்னஸ் சாதனை முயற்சியை கர்நாடக அரசு கைவிட்டது

தினத்தந்தி
|
31 May 2022 10:00 PM IST

மைசூருவில் நடைபெறும் யோகா பயிற்சி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதால், அங்கு கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த கர்நாடக அரசு தற்போது அதை கைவிட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

அரண்மனை நகரம்

சுற்றுலா நகரம், அரண்மனை நகரம் என்று பல்வேறு புனைப்பெயர்களைக் கொண்ட மைசூருவில் ஒவ்வொரு வருடமும் யோகா தினம் வெகு விமரிசையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் சர்வதேச யோகா தினமான ஜூன் மாதம் 21-ந் தேதி அன்று மைசூரு அரண்மனை வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து யோகா பயிற்சியில் ஈடுபடுவது வெகு சிறப்பாக இருக்கும். கடந்த 2017-ம் ஆண்டு மைசூரு அரண்மனையில் 55,506 பேர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அது சாதனையாக கருதப்பட்டது. பின்னர் 2018-ம் ஆண்டில் 60 ஆயிரம் பேர், 2019-ம் ஆண்டில் 70 ஆயிரம் பேர் யோகா பயிற்சியில் ஈடுபட்டு சாதனை படைத்தனர்.

கின்னஸ் சாதனை

ஆனால் 2018-ம் ஆண்டு ராஜஸ்தானில் ஒரு லட்சத்து 984 பேர் ஒருசேர யோகா பயிற்சியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்தனர். அதுவே இன்றுவரை சாதனையாக உள்ளது. இந்த வருடம் நடைபெறும் யோகா தினத்தன்று அந்த சாதனையை முறியடிக்க கர்நாடக அரசு திட்டமிட்டு இருந்தது. அதற்காக மைசூரு அரண்மனையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை யோகா பயிற்சியில் ஈடுபட வைக்க முயற்சி மேற்கொண்டது.

ஆனால் இந்த ஆண்டு மைசூருவில் நடக்கும் யோகா பயிற்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. அதனால் அந்த சாதனை முயற்சியை கர்நாடக அரசு கைவிட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கைவிடப்பட்டது

பிரதமர் பங்கேற்கும் அந்த நிகழ்ச்சியில் 10 முதல் 15 ஆயிரம் பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் கின்னஸ் சாதனை முயற்சியை கைவிட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பா.ஜனதாவைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹா எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், 'பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21-ந் தேதி சர்வதேச யோகா தினத்தன்று மைசூரு அரண்மனை வளாகத்தில் நடைபெறும் யோகா பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனால் அங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை திரட்டி கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த கர்நாடக அரசு அதை கைவிட்டுள்ளது. அன்றைய தினம் அரண்மனை வளாகத்தில் 15 ஆயிரம் பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்' என்று கூறினார்.

மேலும் செய்திகள்