< Back
பெங்களூரு
இடிந்து விழும் நிலையில் முகநூர் ஆற்றுப்பாலம்  சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பெங்களூரு

இடிந்து விழும் நிலையில் முகநூர் ஆற்றுப்பாலம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
12 Sept 2022 11:16 PM IST

ஆனேக்கல் தாலுகா முகநூர் ஆற்றுப்பாலத்தில் வாகனம் சென்றால் அதிர்வு ஏற்படுவதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆனேக்கல்:

ஆற்றுப்பாலம்

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சர்ஜாப்புரா வழியாக சிக்க திருப்பதிக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளது முகநூர் மேம்பாலம். இந்த மேம்பாலம் சர்ஜாப்புரா-சிக்கதிருப்பதியை இணைக்கும் முக்கியமான சாலையாகும். இந்த பாலத்திற்கு அடியில்

தட்சிண பினாகினி ஆறு பாய்ந்தோடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பிற மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் 24 மணி நேரமும் இந்த ஆற்று பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. ஆரம்ப காலத்தில் இலகுரக வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன. தற்போது கனரக வாகனங்கள் அதிகப்படியாக இந்த ஆற்று பாலத்தில் சென்று வருகிறது. இதனால் கனரக வாகனங்களின் பாரத்தை தாங்கி கொள்ள முடியாத நிலையில் அந்த பாலம் உள்ளது.

இடிந்து விழும் அவலம்

மேலும் ஆற்று பாலமும் சிதிலமடைந்து காணப்படுகிறது. அதாவது இந்த மேம்பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் சென்றால், அதிர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த அதிர்வால் சில தடுப்பு சுவர்கள் உடைந்து கீழே விழுந்துள்ளது. இதே நிலை நீடித்தால் வாகனங்கள் செல்ல முடியாது என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தற்போது பெய்து வருவது போன்று மீண்டும் மழை பெய்தால், இந்த பாலம் இடிந்து விழுந்துவிடும் என்று கூறப்படுகிறது. இதனால் ஆற்று பாலத்தை சீரமைத்து கொடுக்கும்படி பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்