சுற்றுலா வந்த தாய்-மகன் மீது தாக்குதல்
|சென்னகேசவா கோவிலில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சுற்றுலா வந்த தாய்-மகனை தாக்கிய ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஹாசன்,
சென்னகேசவா கோவிலில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சுற்றுலா வந்த தாய்-மகனை தாக்கிய ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ெசன்னகேசவா கோவில்
ஹாசன் மாவட்டம் பேளூரில் பிரசித்தி பெற்ற சென்னகேசவா கோவில் அமைந்துள்ளது. புராதன கோவிலான இது, சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இதனால் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இந்த கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த கோவில் பின்புறம் வாகன நிறுத்துமிடம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் சுற்றுலா துறை டெண்டர் மூலம் தனியாருக்கு வாகன நிறுத்திமிடத்துக்கு பணம் வசூலிக்க உரிமம் கொடுத்துள்ளது. ஆனால் கோவில் பின்புறம் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிப்பதுடன், கோவில் முன்புறம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் பார்க்கிங் உரிமம் வாங்கிய நிறுவனத்தின் ஊழியர்கள் கட்டணம் வசூலித்து வருவதாக தெரிகிறது.
தாய்-மகன் மீது தாக்குதல்
இந்த நிலையில் நேற்று முன்தினம் தாவணகெரேவை சேர்ந்த வீணா என்ற பெண் தனது குடும்பத்துடன் வாகனத்தில் சென்னகேசவா கோவிலுக்கு சுற்றுலா வந்தார். அப்போது அவர்கள் கோவிலின் முன்பகுதியில் வாகனத்தை நிறுத்தி உள்ளனர். அப்போது, பார்க்கிங் உரிமம் பெற்ற நிறுவனத்தின் ஊழியர், அந்த வாகனத்துக்கு கட்டணம் கேட்டுள்ளார்.
ஆனால், கட்டணம் கொடுக்க மறுத்த அவர்கள், கோவிலின் முன்புறம் கட்டணம் வசூலிக்க அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் ஊழியர்கள் வீணாவின் மகனை தாக்க முயன்றனர். இதனை வீணா தடுக்க முயன்றார். அந்த சமயத்தில், ஊழியர்கள் வீணாவை முகத்தில் தாக்கி உள்ளனர். இதில் வீணா பலத்த காயம் அடைந்தார். மேலும் வீணாவின் மகனையும் தாக்கி உள்ளனர். அவரும் காயம் அடைந்தார்.
போலீசில் புகார்
இந்த நிலையில் தாய், மகனை ஊழியர்கள் தாக்குவதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பேளூர் போலீசில் வீணா புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.