மலை மாதேஸ்வரா கோவிலில் லட்டு பிரசாதத்துடன் கொடுத்த: ரூ.2.93 லட்சத்தை திரும்ப ஒப்படைத்த பெங்களூரு வாலிபர்
|மலை மாதேஸ்வரா கோவிலில் லட்டு பிரசாதத்துடன் ஊழியர் தவறுதலாக கொடுத்த ரூ.2.93 லட்சத்தை பெங்களூரு வாலிபர் திரும்ப ஒப்படைத்துள்ளார்.
கொள்ளேகால்:
ரூ.2.93 லட்சம் பணப்பை
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூா் தாலுகா மாதேஸ்வரன் மலை பகுதியில் பிரசித்தி பெற்ற மலை மாதேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். மலை மாதேஸ்வரா கோவிலில் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் லட்டு பிரசாதமாக வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி, கோவிலில் பிரசாத கவுண்டரில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது, ஊழியர் ஒரு பக்தருக்கு லட்டு பிரசாதத்துடன் தவறுதலாக ரூ.2.93 லட்சம் இருந்த பணப்பையை கொடுத்துவிட்டார். அந்த பக்தரும் கவனிக்காமல் பணப்பையை வாங்கி சென்றுவிட்டார்.
திரும்ப ஒப்படைப்பு
இந்த நிலையில், சிறிது நேரத்தில் பணப்பையை தவறுதலாக கொடுத்துவிட்டதை உணர்ந்த ஊழியர், இதுகுறித்து கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இதுகுறித்து மாதேஸ்வரன் மலை போலீசில் கோவில் நிர்வாகிகள் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் பிரசாதத்துடன் பணப்பையை வாங்கி சென்ற பக்தர் யார் என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்ற வாலிபர், மலை மாதேஸ்வரா ேகாவில் வளர்ச்சி அதிகாரி பசவராஜை தொடர்பு கொண்டு, தனக்கு தவறுதலாக பணம் இருந்த பையை கொடுத்துவிட்டதாகவும், தானே வந்து பணத்தை திரும்ப ஒப்படைப்பதாகவும் கூறினார். இதையடுத்து நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்த நரசிம்மூர்த்தி, கோவில் வளர்ச்சி அதிகாரி பசவராஜிடம் ரூ.2.93 லட்சம் இருந்த பணப்பையை ஒப்படைத்தார். அந்த பணத்தை கோவில் வளர்ச்சி அதிகாரி சரி பார்த்தார்.
லட்டு பிரசாதத்துடன் தவறுதலாக கொடுத்த ரூ.2.93 லட்சம் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த பெங்களூரு வாலிபரை போலீசார் மற்றும் கோவில் நிர்வாகிகள் வெகுவாக பாராட்டினர்.