கோலார் தங்கவயல் நகரசபையில் பணியாற்றும்தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்
|கோலார் தங்கவயல் நகரசபையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோலார் தங்கவயல':
கோலார் தங்கவயல் நகரசபையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூய்மை பணியாளர்கள்
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் நகரசபையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு குப்பை கழிவுகளை அகற்றும்போது, அவர்கள் பாதிக்கப்படாத வகையில் கவச உடை, கையுறை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை எழுந்துள்ளது. இதுபோல் நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் தூய்மை பணியாளர்கள் உரிய பாதுகாப்புகள் இன்றி பணியாற்றுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து மத்திய அரசு, தூய்மை பணியாளர்களுக்கு கவச உடை, கையுறை போன்றவற்றை சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து மாநில அரசும் உள்ளாட்சி நிர்வாகங்கள், தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கவச உடை, கையுறை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உத்தரவு பிறப்பித்து இருந்தது.
பாலிதீன் பைகள்
இந்த நிலையில் கோலார் தங்கவயல் நகரசபையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள், கையுறை, கவச உடை ஆகியவை இல்லாமல் பணியாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. தூய்மை பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் பாலிதீன் பைகளை கைகளில் மாட்டிக்கொண்டு பணியாற்றுவதை பார்க்க முடிகிறது.
நேற்று கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை மகாத்மா காந்தி மார்க்கெட்டில் மலைபோல் குவிந்து கிடந்த குப்பை கழிவுகளை தூய்மை பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அகற்றியதை பார்க்க முடிந்தது. அவர்கள் தங்களது கைகளில் பாலிதீன் பைகளை மட்டுமே மாட்டி இருந்தனர்.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இதுபற்றி அறிந்த சமூக ஆர்வலர்கள் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், கையுறைகள், கவச உடைகள் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே மலேரியா, டெங்கு உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்கள் பரவி வரும் நிலையில் இதுபோன்று எந்தவித பாதுகாப்பும் இன்றி தூய்மை பணியாளர்கள் பணியாற்றுவது ஆபத்தானது என்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.