< Back
பெங்களூரு
கோலார்; ஆயுதங்களால் தாக்கி காங்கிரஸ் பிரமுகர் படுகொலை
பெங்களூரு

கோலார்; ஆயுதங்களால் தாக்கி காங்கிரஸ் பிரமுகர் படுகொலை

தினத்தந்தி
|
25 Oct 2023 12:15 AM IST

கோலாரில் பயங்கர ஆயுதங்களால் தாக்கி காங்கிரஸ் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.

கோலார் தங்கவயல்-

கோலாரில் பயங்கர ஆயுதங்களால் தாக்கி காங்கிரஸ் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.

காங்கிரஸ் பிரமுகர்

கோலார் மாவட்டம் சீனிவாசப்பூரை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது 62). காங்கிரஸ் பிரமுகர் ஆவார். இவர் முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் மற்றும் போலீஸ் மந்திரி பரமேஸ்வரின் தீவிர ஆதரவாளர் ஆவார். ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்த அவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசில் சேர்ந்தார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை கோலார் மாவட்ட பஞ்சாயத்து தலைவராகவும் செயல்பட்டார்.

இவர், சீனிவாசப்பூர் அருகே ஒலேகெரே பகுதியில் மதுபானக்கடை ஒன்று கட்டி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் அந்த கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய சீனிவாஸ் அங்கு சென்றார்.

கொலை

அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல், சீனிவாசை வழிமறித்து தாக்கியது. மேலும் அவரது முகத்தில் பெப்பர் ஸ்பிரேவை அடித்தனர். இதனால் கண் எரிச்சலால் சீனிவாஸ் அவதிப்பட்டார். அப்போது மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சீனிவாசை சரமாரியாக தாக்கினர்.

இதில் பலத்த காயம் அடைந்த சீனிவாஸ், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து சீனிவாசை மீட்டு சிகிச்சைக்காக ஜாலப்பா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சீனிவாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார், மருத்துவமனைக்கு விரைந்து சென்று சீனிவாசின் உடலை பார்த்து கண்ணீர் சிந்தினார். மேலும், போலீஸ் மந்திரி பரமேஸ்வரும் இரவில் ஆஸ்பத்திரிக்கு சென்று சீனிவாசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

3 பேர் கைது

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வேம்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சீனிவாசை கொலை செய்யப்பயன்படுத்திய கத்தி மற்றும் பை ஒன்றையும் போலீசார் பறிமுதல் ெசய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சீனிவாஸ் கொலை வழக்கில் தொடர்புடைய மர்மநபர்கள் லட்சுமிசாகர் வனப்பகுதியில் அருகே பதுங்கி இருப்பதாக வேம்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். பின்னர் அங்கு பதுங்கி இருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் வேணுகோபால், மணிந்திரா மற்றும் சந்தோஷ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து செல்ல முயன்றனர். அந்த சமயத்தில், அவர்களில் வேணுகோபாலும், மணிந்திராவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், போலீஸ்காரர்கள் நாகேஷ், மஞ்சுநாத் ஆகியோரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.

துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

அப்போது இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு அவர்களை சரணடையும்படி எச்சரித்தார். ஆனாலும் அவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதையடுத்து வெங்கடேஷ், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர்களில் கால்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் வேணுகோபாலும், மணிந்திராவும் சுருண்டு விழுந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதையடுத்து துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த போலீசாரும், பிடிபட்ட வேணுகோபால், மணிந்திரா ஆகியோரும் கோலார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசியல் காரணங்களுக்காக...

துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட வேணுகோபால், முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமாரின் ஆதரவாளர் ஆவார். அவர், ரமேஷ்குமாரின் படத்தை மார்பில் பச்சை குத்தி உள்ளார். இதனால் அரசியல் காரணங்களுக்காகவே சீனிவாசை அவர்கள் கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வேம்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாார்கள். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் கோலாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்