கோலார், சிக்பள்ளாப்பூரில் கனமழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 6 ஆயிரம் கோழிகள் செத்தன
|கோலார், சிக்பள்ளாப்பூரில் கனமழை பெய்தது. துமகூருவில் தரைப்பாலம் இடிந்தது. மேலும் செல்லப்பட்டது. கோலாரில், வெள்ளத்தில் 6 ஆயிரம் கோழிகள் செத்தன.
கோலார் தங்கயவல்:
கன மழை
சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே தாலுகாவில் உள்ள அமானி பைரசாகர் அணை நிரம்பியது. இந்த அணையில் இருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்படுவதால் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் மாவட்டகளுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சிக்பள்ளாப்பூர் குஷாவதி அணையில் இருந்து வெளியேறும் நீரால் அந்த பகுதியை ஒட்டிய சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதேபோல கோலார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் டவுன், சாந்திநகர், சவுடேஸ்வரிநகர், ரகுமத் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அதிகாலை வரை தூங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
6 ஆயிரம் கோழிகள்
அதேபோல செலுவனஹள்ளி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இந்த நீர் அந்த பகுதியில் இருந்த கோழிப்பண்ணைக்குள் புகுந்ததால் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு செத்தன. இதனால் கோழி பண்ணை உரிமையாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டனா தாலுகா சென்னகட்டே ஏரி நிரம்பி, கரை உடைந்தது.
இதில் கரைபுரண்டு ஓடிய நீர் விளைநிலங்களுக்குள் பாய்ந்ததில் விளை பயிர்கள் முற்றிலும் நாசமானது. மேலும் பாகூர் ஏரி நிரம்பி வெளியேறிய மழைநீரால் நுர்கேஹள்ளி-பாகூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெலகாவி மாவட்டத்தில் பெய்த கனமழையின்போது ஹலியாளா பாலம் அருகே கிருஷ்ணா ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரது உடலை தேடும் பணி நடந்து வருகிறது.
தரைப்பாலம் இடிந்தது
ராமநகர் மாவட்டத்தில் 3.3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் கனமழையால் அரக்காவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
துமகூரு மாவட்டம் கொரட்டகெரேவில் பெய்த கனமழைக்கு கோதவனஹள்ளி-தீர்த்தா சாலையில் உள்ள தரைப்பாலம் இடிந்து விழுந்தது. இதனால் சிக்பள்ளாப்பூர்-துமகூரு-கோலார் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொகுதி எம்.எல்.ஏ பரமேஸ்வர் நேரில் சென்று பாலத்தை பார்வையிட்டார். மேலும் கலெக்டரை அழைத்து உடனே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார். இதேபோல் மாநிலத்தில் மைசூரு, மண்டியா, ஹாசன் பகுதிகளில் கனமழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தியது.